கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சித்த மருத்துவம் கூறினால், அரசு சந்தேகிப்பது ஏன்?
By Nivetha | Galatta | Jul 09, 2020, 05:18 pm
கோவிட் - 19 கொரோனாவால் உலகம் முழுக்க 5.5 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் இதுவரை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கொரோனாவுக்கான தடுப்பு நடவடிக்கைகள் மிகத்தீவிரமாகத் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. பல நூறு ஆய்வுகள் உலகம் முழுவதும் நடந்து வரும் நிலையில், இந்தியாவில் கோவேக்ஸின் என்ற மருந்து மட்டும், தற்போதைக்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்து கண்டறியப்படும் பணியில் ஒவ்வொரு நாடும், தங்களை உலக சுகாதார நிறுவனத்தோடு இணைத்துள்ளது.
இப்படியான சூழலில் இன்று இந்தியப் பிரதமர் மோடி, `'கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில், இந்தியா உறுதியான போரை நடத்திவருகிறது. தடுப்பூசி கண்டுபிடிப்பதிலும், அதன் உற்பத்தியிலும் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும்" எனக்கூறியிருக்கிறார்.
இதற்கிடையில் உலகளாவிய தடுப்பு மருந்து பணிகள் குறித்துப் பேசியிருந்த உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், `உலக நாடுகளில், தடுப்பு மருந்தோடு இப்போது ஆய்விலிருக்கும் அனைத்து நிறுவனங்களோடும் எங்களின் உறுப்பினர்கள் மூலம், நாங்கள் தொடர்பிலிருக்கிறோம். ஆகவே உலகளவில் இயங்கும் தடுப்பு மருந்து பணி எங்கு முதலில் நிறைவடைகிறதென அறிந்து, உடனடியாக அவற்றை உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்க வழி ஏற்படுத்தித் தருவோம்' எனக் கூறியிருந்தார். இப்போதைக்கு, ஆக்ஸ்ஃபோர்ட்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் தயாரித்துவரும் தடுப்பு மருந்துதான், முன்னணியில் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார் சௌமியா. இந்த ஆய்வாளர்கள், இப்போது ஃபேஸ் - 3 அதாவது மூன்றாவது நிலை ஆய்வில் இருக்கிறது.
இந்தியாவில், கோவேக்ஸின் மட்டுமே வழக்கத்திலிருந்தது. மற்றபடி, ஆயுஷ் தொடர்பான மருந்துகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து, மத்திய மாநில அரசுகளிடம், சென்னை உயர்நீதிமன்றம் ஆயுஷ் துறை மீதான தன கண்டன குரலை இன்று பதிவுசெய்துள்ளது. தனது கண்டத்தை, கேள்விகள் வழியாக அவை எழுப்பியுள்ளது. அதில்,
``ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி மருத்துவர்கள் முன்வைத்த எத்தனை கொரோனா தடுப்பு மருந்துகள், ஆயுஷ் அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன?
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாகச் சித்த மருத்துவம் கூறினால், அரசு அதைச் சந்தேகிப்பது ஏன்?
இதுவரை எத்தனை சித்த மருத்துவர்கள் கூறிய மருந்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன?
நம் மருத்துவர்களுக்குக் கட்டமைப்பு, பண உதவி செய்து அவர்களின் கண்டுபிடிப்பை அரசு ஊக்குவிக்க வேண்டும்!' -
எனக்கூறியுள்ளது.
சில தினங்களுக்கு முன்தான், மதுரை உயர்நீதிமன்றம், `சித்த மருத்துவ முறைக்கு, அரசு தனது ஆதரவைத் தர வேண்டும் எனக்கூறியிருந்தது. குறிப்பாக, சித்த மருத்துவ ஆய்வுகளுக்கான தனது நிதியை மாநில அரசு ஒதுக்க வேண்டும் எனக்கூறியது. இதை அவர்கள் குறிப்பிடக்காரணம், இரண்டு சித்த மருத்துவர்கள். அம்மருத்துவர்கள் தங்களிடம் கோவிட் - 19 கொரோனா வைரஸை அழிக்கும் மருந்து இருப்பதாகச் சொல்லி, மேற்கொண்டு ஆய்வு செய்ய அரசு நிதி அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள்.
சித்தா போன்ற பாரம்பரிய மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் பலரும், தங்களின் மருத்துவத்தின் மீது வைக்கப்படும் உதாசீனத்துக்கு எதிரான தங்களின் கண்டனக்குரல்களை கடந்த சில நாள்களாகவே பதிவிட்டு வந்தனர். இவர்களின் குரல்களுக்கு, உச்சநீதிமன்றங்கள் செவி சாய்த்திருப்பது, மிக முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
கொரோனாவுக்கு, இப்போது வரை தமிழகத்தில் 12 வகை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலொன்று, சித்த மருத்துவ சிகிச்சை. இதில், இப்போதுவரை ஒரு இறப்புகூட பதிவாகவில்லை என்பது முக்கியமான குறிப்பு. அப்படியிருக்கும்போது, சித்தா சிகிச்சையை அரசு அலட்சியப்படுத்தவோ, உதாசீனப்படுத்தவோக் கூடாது என்கிறார்கள் அத்துறைசார் வல்லுநர்கள்.
கொரோனா வைரஸின் தன்மை இப்போதைக்கு முழுமையாகத் தெரியாததால், இதற்கு இன்னமும் நேரடி மருந்து கண்டறியப்படாமல் இருக்கிறது. அதனால்தான் இப்போது வரை அனைத்துமே, கூட்டு சிகிச்சையாக தரப்படுகிறது. இந்தக் கூட்டு சிகிச்சை முறையில், சித்த மருத்துவம் கைமேல் பலனளிப்பதைக் காணும்போது, அதை அரசு அதிகாரபூர்வமாக கையில் எடுப்பது ஆரோக்கியமான விஷயமாக இருக்கும்!
நன்மை நடக்கும் என நம்புவோமாக!
- ஜெ. நிவேதா