கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எப்படியாவது நாம் முதலில் கொரோனாவுக்கு தடுப்பூசியினை கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். யார் முதலில் தடுப்பூசிகளை கண்டுபிடிப்பார்கள் என்று உலகமே கவனித்துக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது, இப்பொழுது ரஷ்யா உலகிற்கு முதலில் கொரோனாவிற்க்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறியுள்ளது.
 
ரஷ்ய நாட்டைச் சேர்ந்த காமலேயா என்ற நிறுவனம் கொரோனாவை குணமாக்க மருந்தை கண்டுபிடித்து, உலகிற்கு அதை முதலில் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுள்ளது.

மனிதர்கள் மீதும் செலுத்தி இதன் முடிவுகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக, அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் முரஸ்கோ இரு தினங்களுக்கு முன், ``ஆகஸ்ட் 12 ஆம் தேதி அன்று ரஷ்யா உலகிற்கு முதன்முதலில் கொரோனா தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் உற்பத்தி அக்டோபர் மாதத்தின் இறுதியில் தொடங்கும். இதனுடைய செலவு பட்ஜெட் நாட்டின் பட்ஜெட்டில் சேர்க்கப்படும்.தடுப்பு மருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளோம்" என கூறியிருந்தார்.

ஆனால், ரஷ்யா உலக சுகாதார நிறுவனத்திடம், இந்த தடுப்பூசிக்கான அங்கீகாரத்தை இன்னும் பெறவில்லை. அதனால் உலக சுகாதார நிறுவனம், ரஷ்யாவை கடுமையாக கண்டித்திருந்தது. `கொஞ்சமேனும் விதிமுறைகளை பின்பற்றுங்கள்' என்கிற தொணியில் இதை பதிவு செய்தது உலக சுகாதார நிறுவனம்.

இந்நிலையில், அமெரிக்கா - இஸ்ரேல் போன்ற நாடுகளும் இறுதி நிலையில் நாங்கள் இருக்கிறோம் என தொடர்ந்து கூறி வருகிறது. ஃபைசர், மாடர்னா, மெர்க் ஆகிய நிறுவனங்கள், முன்னிலையில் இருப்பதாக சொல்லிக்கொள்ளும் நிறுவனங்களில் முக்கியமானவை. இவை, தடுப்பூசிகளை லாபத்துக்கு விற்க முயற்சி செய்து வருகிறதென்ற குற்றச்சாட்டுகள் தற்போது எழுந்துள்ளது. அதே வேளையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தன் தடுப்பூசியை 10 டாலர்களுக்குக் கொண்டு வரப்போவதாகவும் ‘இது அவசரகால பெருந்தொற்று பயன்பாடுகளுக்கே’ என்றும் தெரிவிப்பதாக ஆங்கில ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

எதுவாகினும், உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்த பிறகே, முழுமையான பயன்பாட்டுக்கு வரவேண்டும். ஆனால் முறையான அனுமதிக்கு முன்பே பணக்கார நாடுகள் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் கொள்முதலுக்கு முந்தைய உடன்படிக்கைகளில் இறங்கியுள்ளன. என்பது, பலகட்ட விமர்சனங்களை பெற்றுவருகிறது. இப்படி தடுப்பூசியை லாப நோக்கத்தில் தயாரிக்க முனைவது, ‘வேக்ஸின் நேஷனலிசம்’ என்று மருத்துவ துறையில் வழங்கப்படுகிறது. `இது மிகவும் மோசமான, ஆபத்தான போக்காக மாறும்' என்று நிபுணர்கள் சிலர் இப்போதே கண்டித்துள்ளனர்.

நிபுணர்களோடு உலக சுகாதார நிறுவனத்தினறும் தற்போது இணைந்திருக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் டெட்ராஸ் அதேனாம் கூறும்போது,

``இது நிச்சயம் மக்களுக்கு கேடுகளையே தரும். உலகம் இப்போது கொரோனாவுக்கான உடனடி தீர்வை எதிர்நோக்கி உள்ளது. வேகமாக நோயை குணப்படுத்தும் ஒரு தடுப்பு மருந்து, இப்போது உடனடி தேவை. ஆனால், இதில் லாபநோக்கத்தை எதிர்பார்ப்பது தவறு. உலகமயமாதல் என்பது பற்றிய சரியான புரிதல், இப்படியான சூழலில் நிறைய தேவைப்படுகிறது. 

லாப நோக்கத்தோடு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டால், பொருளாதார ரீதியாக பின்தங்கிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்ன செய்வார்கள்?

சேவை மனப்பான்மை இருந்தால்தான் குறைந்த விலையில் இந்த மருந்தை விற்க வேண்டும் என்றில்லை. இங்கு சேவை என்ற பேச்சுக்கு இடமில்லை. இங்கு தேவை என்பது மட்டுமே உண்மை. ஒருவேளை அதிக விலை காரணமாக, குறிப்பிட்ட மக்கள் மருந்தை பெறாமல் போனால், விளைவை அவர்கள் மட்டும் சந்திக்க போவதில்லை. நீங்களும்தான் சந்திக்க போகின்றீர்கள். ஏனெனில், மருந்தை பெறாதவர்கள், நோயை அவர்களே அறியாமல் பரப்புவார்கள். உலகம் முழுக்க, கொரோனா நீடித்துக் கொண்டே இருக்கும். உலகம் என்பது என்ன? நாம் எல்லோரும் இருப்பதுதானே! எனில், உங்களுக்கும் ஆபத்து இருக்கிறது என்றுதான் பொருள்!

ஆகவே பேதங்களை மறந்து, அனைத்து நாட்டின் தலைவர்களும் இணைந்து, கண்டறியப்படவிருக்கும் தடுப்பு மருந்தை அனைவருக்கும் தர ஏற்பாடு செய்யுங்கள். இந்த உலகளாவிய பெருந்தொற்று குறைய வேண்டுமென்றால், எல்லோருக்குமே தடுப்பு மருந்து கிடைக்கப்பெற்றாக வேண்டும்"

என்று கூறியிருக்கிறார்.

உலக சுகாதார நிறுவனத்தின் கணிப்புப்படி, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகத்தினர் முதலில் பாதுகாப்பான தடுப்பு மருந்தை கண்டறிவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் கண்டறியும் மருந்தை, தயாரிக்கும் பணியில் இறங்கியிருப்பது, நம் இந்தியா தான்! இந்தியாவின் சீரம் என்ற நிறுவனம் இதை வாங்கியுள்ளது. சீரம், லாப நோக்கத்தில் செயல்படவில்லை என்பது, மகிழ்ச்சிகரமான தகவல். இப்போதைக்கு சீரம், மருந்தை 225 ரூபாய்க்கு விற்பனை செய்யவிருப்பதாக சொல்லியிருக்கிறது. இது நிஜமாகும் பட்சத்தில், உலக நாடுகளுக்கு இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை எனும் அடிப்படையில், முன்மாதிரியாக விளங்கும்.