2020 க்குள் கொரோனா தடுப்பூசியா? உலக சுகாதார நிறுவனத்தின் சுவாரஸ்ய அப்டேட்!
By Nivetha | Galatta | Oct 07, 2020, 03:24 pm
கொரோனாவிலிருந்து உலகம் முழுவதுமாக விடுபட, தடுப்பூசி கண்டறியப்பட வேண்டும் என்பது மருத்துவத்துவர்கள் சொல்லும் விஷயமாக இருக்கிறது. இதன் அடிப்படையில் தடுப்பூசிகள் கண்டறியும் பணி உலகம் முழுவதும் வேகமாக நடந்து வருகிறது.
இந்தியாவில் மூன்றாம் கட்ட சோதனைகள் 19 க்கும் மேற்பட்ட மையங்களில் நடந்தது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக மகாராஷ்டிராவின் புனே மற்றும் மும்பையிலும், குஜராத்தின் அகமதாபாத்திலும் இந்த முக்கியமான கட்டத்தின் கீழ், 1,600 பேருக்கு தடுப்பூசி வழங்கப்படும் என கூறப்பட்டது.
இருப்பினும் `எந்தவொரு தடுப்பூசியும் அல்லது நிறுவனமும் மட்டுமே, உலகளாவிய தேவையை பூர்த்தி செய்ய முடியாது' என்று சனோஃபி பாஸ்டரின் நிர்வாக துணைத் தலைவர் தாமஸ் ட்ரையம்பே கூறியுள்ளார். அதேபோல, தடுப்பூசிகள் மட்டுமே முழுமையான தீர்வாக இருக்காது என்று, உலக சுகாதார நிறுவனமும் அறிவித்திருந்தது.
பலவித பிரச்னைகள், எதிர்வினைகள் சொல்லப்பட்டாலும் தடுப்பூசிக்கான பணிகள் வேகமாகவும் விரைவாகவும் செய்யப்பட்டு வருகிறது. உலகளைவில் 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தடுப்பூசி கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவிலும் கொரோனாவுக்கான பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதில் ஒரு பகுதியாக, ஆக்ஸ்ஃபோர் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசிக்கான உலகளாவிய மக்கள் மீதான சோதனையிலும், இந்தியா பங்கெடுத்து வருகின்றது.
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க பல்வேறு நாடுகளும் தடுப்பு மருந்து குறித்த சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சூழலில், ரஷ்யா மட்டுமே ‛ஸ்புட்னிக்-வி' என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்தது. ஆனாலும், இதில் பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக இருப்பதாக வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், ரஷ்யா தடுப்பு மருந்து உற்பத்தியை தொடங்கிவிட்டன. மேலும், இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் கொரோனா தடுப்பூசி கண்டறியும் போட்டியில் இறுதிக்கட்டத்தில் உள்ளது.
இந்நிலையில், ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம், கொரோனா தடுப்பூசி எப்போது என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் கூறியதாவது: ``இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது. கொரோனா தடுப்பூசி தயாரான உடன் அவை அனைவருக்கும் சமமான விகிதத்தில் விநியோகம் செய்ய உலக நாடுகளின் தலைவர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி நிச்சயம் தேவைப்படுகிறது. சுமார் 9 கொரோனா தடுப்பு மருந்துகள் இறுதி கட்ட பரிசோதனையில் இருந்து வருகிறது" என்று கூறியிருக்கிறார் அவர்.
தடுப்பூசி கண்டுபிடிப்புக்கான விஷயத்தில், ரஷ்யா மட்டும்தான் இப்போதைக்கு ஒரு தடுப்பூசியை அறிவித்துள்ளது. ஆனால் ரஷ்ய தடுப்பூசி கண்டுபிடிப்பு குறித்து உலக அளவில் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிஞர்கள் எதிர்மறையான கருத்துக்களை கூறி வருகின்றனர். ``தடுப்பூசி விவகாரத்தில் அவசரப்படக்கூடாது" என்று ரஷ்யாவை உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் மேலும் ஒரு தடுப்பூசி தயாரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருவதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி வெக்டர் இன்ஸ்டிடியூட் என அழைக்கப்படும் ரஷ்ய அரசின் வைராலஜி மற்றும் உயிர் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்து வழங்குவதாகவும், மேலும் இதை தேசிய சுகாதார கண்காணிப்பு அமைப்பான ரோஸ்போடிரெப்நட்சார் கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கான மருந்து பரிசோதனை இரண்டு கட்டமாக நடைபெற்றுள்ளது, அதில் முதற்கட்டத்தில் 14 பேரும், இரண்டாவது கட்டத்தில் 43 பேரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் நலமுடன் இருப்பதாகவும், சுகாராத கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த பரிசோதனை முழுவதுமாக வெற்றியடையும் பட்சத்தில், கூடிய விரைவில் 2 வது தடுப்பூசியை ரஷ்யா அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடதக்கது.