``எனக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, கடவுள் கொடுத்த வரம்" - ட்ரம்ப் சர்ச்சை பேச்சு
By Nivetha | Galatta | Oct 08, 2020, 03:38 pm
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலெனியா டிரம்ப் இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து இருவரும் தனிமைபடுத்தப்பட்டனர். இந்நிலையில் டிரம்புக்கு காய்ச்சல், ஆக்சிஜன் அளவு குறைந்து காணப்பட்டதால் அவர் மேரிலேண்டின் பெட்ஹேஸ்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தற்போது காய்ச்சல் குணமடைந்துள்ளதாகவும், உடல் உள்ளுறுப்பு இயக்கங்கள் சீராக இருப்பதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர் அடுத்த திங்கள்கிழமைக்குள் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. டிரம்புக்கு இதுவரை இரண்டு முறை ரெம்டெசிவர் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், அவருடைய சிறுநீரக மற்றும் கல்லீரல் செயல்பாடுகள் நன்றாக உள்ளன. அவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் மட்டுமே உள்ளன என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
தற்போதைக்கு ட்ரம்ப் கலந்துக்கொள்ள இருந்த அதிபர் தேர்தலுக்கான பிரச்சார வேலைகள் தடைபட்டுள்ளது. கடந்த வெள்ளியன்று டிரம்புக்கு உடலில் ஆக்சிஜன் அளவு 94 சதவிகிதத்தை விட குறைந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. சனியன்று அவரது ஆக்சிஜன் அளவு மேலும் குறைந்து 93 சதவிகிதம் ஆனது. நல்ல உடல் நலத்தில் இருப்பவரின் உடலில் ஆக்சிஜன் அளவு 95 சதவிகிதம் அல்லது அதற்கு அதிகமாக இருக்கும்.
அவருக்கு கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்பு இதுவரை குறைந்தபட்சம் ஒரு முறை செயற்கை ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு சுமார் ஒரு மணி நேரம் கூடுதல் ஆக்சிஜன் வழங்கப்பட்டது என்று மருத்துவர் சான் தெரிவித்துள்ளார்.
தீவிர கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளவர்கள் உயிரிழப்பு விகிதத்தை குறைக்கும் என்று ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ள டெக்சாமெத்தசோன் மாத்திரையும் டிரம்புக்கு கொடுக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். 74 வயதாகும் டிரம்ப் உடல்பருமன் வாய்ந்தவராகவும், அதிக பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ள வயதுடையவராகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளார்.
இன்னும் சோதனை நிலையிலேயே இருக்கும் பல மருந்துகளின் கலவை அவருக்கு வெள்ளியன்று வழங்கப்பட்டது. அன்றே வைரஸ் தொற்றுகளுக்கு எதிரான ரெம்டிசீவர் மருந்தும் அவருக்கு வழங்கத் தொடங்கப்பட்டது. ஐந்து நாட்களுக்கு அது அவருக்கு வழங்கப்படும்.
ட்ரம்ப் மனைவி மெலெனியாவுக்கும் கொரோனா உறுதியான நிலையில் அவருக்கு லேசான இருமலும் தலைவலியும் உள்ளதாக தெரிகிறது. அவர் வெள்ளைமாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் டிரம்புடன் தொடர்பில் இருந்த உதவியாளர்கள், ஆலோசகர்கள் உள்ளிட்ட பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மருத்துவமனைக்கு வெளியே கூடியுள்ள தனது ஆதரவாளர்களை பார்த்து வாகன அணிவகுப்பில் இருந்தபடியே கையசைத்தார். மேலும் வெளியே கூடியுள்ளவர்களைப் பார்க்க 'சர்ப்ரைஸ் விசிட்' ஒன்றை தர இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்த சற்று நேரத்தில் அவர் முகக்கவசம் அணிந்தபடி தனது வாகன அணிவகுப்பில் வந்து ஆதரவாளர்களை பார்த்தார்.
எல்லாம் சரியாக இருந்தபோதிலும், கொரோனாவால் ஏற்படும் மிக முக்கியமான பிரச்னையான நுரையீரல் செயல்பாடு சார்ந்த சிக்கல்கள் ட்ரம்புக்கு எந்தளவுக்கு உள்ளன, இப்போது அவருடைய நுரையீரல் எப்படி உள்ளது என்று இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு மருத்துவர் சான் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
இப்போது ட்ரம்ப் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமாகிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து, வெள்ளை மாளிகையின் ரோஸ் கார்டனில் இருந்து ட்ரம்ப் அலுவலகத்திற்குள் வந்தார். வால்டர் ரீட் மருத்துவ மையத்தில் வெள்ளை மாளிகைக்கு திரும்பியவுடன், அங்கேயே மாஸ்க்கை கழற்றிவிட்டு போஸ் கொடுத்தார் ட்ரம்ப். மேலும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் சல்யூட் அடித்தார். மேலும், ``உங்களது வாழ்க்கையை கொரோனா ஆக்கிரமிக்க அனுமதிக்காதீர்கள். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது நன்றாக இருக்கிறேன்" என்று தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டார் அவர். மேலும், தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் விரைவில் பங்கேற்பேன் என்றும் தெரிவித்தார்.
தற்போது தனது உடல் நலம் பற்றி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், ``நான் உங்களின் அன்புக்குரிய அதிபர் பேசுகிறேன் என்று தெரிவித்துள்ளார். தனக்கு கொரோனா பாதிக்கப்பட்டது கடவுள் கொடுத்த ஆசிர்வாதம் வரம் என்று கூறியுள்ளார். பல கோடி மக்களுக்காக தன்னை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். கொரோனாவை உலகம் முழுவதும் பரப்பிய சீனா மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.