போலீசால் போலீஸ்சுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதால், பாதிக்கப்பட்ட திருநங்கை போலீஸ் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனால், உதவி ஆய்வாளர் உட்பட 2 பேர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான சம்யுக்தா, காவல் துறையில் காவலர் பணிக்குத் தேர்வாகி உள்ளார். இதனால் அவர், திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் காலனி பகுதியில் உள்ள காவல் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்தப் பயிற்சிப் பள்ளியில் ஏ.டி.எஸ்.பி. நிலையில் உள்ள காவல் அலுவலர் பயிற்சிப் பள்ளியின் முதல்வராகவும், டி.எஸ்.பி. நிலையில் இருப்பவர் துணை முதல்வராகவும் பதவி வகித்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், திருச்சி நவல்பட்டு காவலர் பயிற்சிப் பள்ளியில் முத்துக்கருப்பன் என்பவர் முதல்வராகவும், மனோகரன் என்பவர் துணை முதல்வராகவும் பதவி வகித்து வருகின்றனர். இந்த சூழலில் தான், திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட பெண் காவலர்களுக்கும் இங்கு, கடந்த 5 மாதங்களாகப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில், 24 வயதான சம்யுக்தாவும் ஒருவர்.
சம்யுக்தாவுக்கு மருத்துவ பரிசோதனையில் பெண் தன்மை அதிகமாக இருந்ததால், பெண் காவலர்களோடு இணைந்து பயிற்சி பெற்று வருகிறார்.
இந்நிலையில் தான், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பயிற்சிப் பள்ளி முதல்வரும், துணை முதல்வரும் பாலியல் ரீதியாக சம்யுத்தாவை தொடர்ந்து துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக சம்யுத்தா, காவல் பயிற்சி பள்ளி டிஐஜி சத்திய பிரியாவுக்கு தொலைபேசி மூலம் புகார் அளித்தார். இது குறித்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் சில தினங்களுக்கு முன்பு பயிற்சி பள்ளிக்கு வந்து, விசாரணை நடத்தினார். “இந்த விசாரணைக்கு சம்யுத்தா தான் காரணம்” என்று, கூறி பயிற்சிப் பள்ளியின் உதவி ஆய்வாளரும், தலைமை காவலரும் சேர்ந்து சம்யுக்தாவைத் கடுமையாகத் திட்டி உள்ளனர். இதனால், பயந்துபோன சம்யுத்தா, பயிற்சி பள்ளியிலேயே விஷம் அருந்து தற்கொலைக்கு முயன்று உள்ளார்.
இதனை கவனித்த அங்கு இருந்த மற்ற பயிற்சி பெறும் பெண் போலீசார், அவரை உடனடியாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த நவல்பட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சம்யுத்தா கூறிய பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாகத் தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் நடத்திய விசாரணையின் அறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்நிலையில், பயிற்சிப் பள்ளி நிர்வாகிகளின் மிரட்டல் காரணமாக சம்யுத்தா தற்கொலைக்கு முயன்றது அங்கு பயிற்சியில் ஈடுபட்டுள்ள சக பெண் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக, சம்யுத்தாவுக்கு வந்த தொடர் மிரட்டல் காரணமாக, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்யுத்தா, தற்கொலைக்கான காரணத்தை மாற்றிக் கூறி இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளன. அதன்படி, “தனக்குப் பயிற்சி பெறும் அளவுக்கு உடல் நிலை சரியில்லை என்ற காரணத்தால் தற்கொலைக்கு முயன்றதாக” சம்யுத்தா கூறியதாகத் தெரிகிறது.
முக்கியமாக, பயிற்சிப் பள்ளியின் முதல்வர், துணை முதல்வர் ஆகியோரை சட்டரீதியாகக் காப்பாற்றும் நோக்கத்தோடு இத்தகைய வாக்குமூலம் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் பாலியல் புகாரில் சிக்கிய காவல் அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது பாலியல் புகாரில் சிக்கியுள்ள துணை முதல்வர் மனோகரன், ஏற்கனவே திருச்சியில் பணியாற்றியபோது பாலியல் புகாரில் சிக்கி உள்ளவர் என்றும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக அவர் திருச்சியில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ன.
மேலும், தற்போது நடைபெற்று வரும் விசாரணையின் அடிப்படையில், சம்யுத்தாவை டார்ச்சர் செய்த உதவி காவல் ஆய்வாளர் அசோக்குமார், இரண்டாம் நிலை காவலர் இஸ்ரேல் ஆகியோர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழக காவல் துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.