தமிழகத்தில் மேலும் 120 கொரோனா மரணங்கள்! - இன்றைய நிலவரம்
By Nivetha | Galatta | Aug 17, 2020, 06:26 pm
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 5,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,43,945 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று புதிய உச்சமாக 1,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,17,835 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 120 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,886 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 5,667 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,83,937 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 54,122 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,705 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ``தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களில் 80 சதவீதம் பேர் குணமடைந்து விட்டதாகவும், முதலிடத்தில் மதுரை 89.3 சதவீதத்துடன் முதல் இடத்திலும், சென்னை 88 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது" என்று ஜேகப் ஜான் என்ற வைரலாஜிஸ்ட் கூறியிருக்கிறார்.
இதுபற்றி அவர்கள் கூறும்போது, ``கடலூர், நாகப்பட்டினம், விழுப்புரம் மாவட்டங்களில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 55 சதவீதமாக உள்ளது. இங்கு சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 44 சதவீதமாக உள்ளது.
ஆகஸ்ட் 16ம் தேதி நிலவரப்படி விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 756 ஆக உயர்ந்தது. ஜூலை மத்திய வாக்கில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 100 ஆகவிருந்த நாகப்பட்டினத்தில் தற்போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 689 ஆக உயர்ந்துள்ளது.
கடலூரிலும் ஜூலையில் 400க்குள் இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று நிலவரப்படி 2728 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையிலும் கொரோனா பாதிப்பு மெல்ல குறைந்து வந்த நிலையில் மீண்டும் சில நாள்களாக ஆயிரத்துக்கும் மேல் பதிவாகிவருகிறது. அதுபோலவே செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஆயிரத்தை நெருங்குகிறது. இங்கும் கரோனா பாதிப்பு குறையும் நிலை காணப்படவில்லை.
சென்னையில் கடந்த ஜூன் மாதத்தில் எப்படி கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததோ, இதுபோல பிற மாவட்டங்களில் தற்போதைய சூழல் காணப்படுகிறது. இது வெகு நாள்களுக்கு முன்பே கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடந்துவிட்டது. இனி அதைக் கட்டுப்படுத்த இயலாது" என்று மருத்துவர் ஜேகப் ஜான் குறிப்பிடுகிறார்.
இனி நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கத் தேவையான வசதியை மேம்படுத்துவது மட்டுமே சிறந்த வழி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.