முதலமைச்சர் பழனிசாமிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று சென்னையில் மையம் கொண்டு தீவிரமாகப் பரவிக்கொண்டு இருக்கிறது. இதனால், சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதன் படி, சென்னையில் நேற்று மட்டும் இன்று புதிதாக 1,140 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால், சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது நேற்றைய நிலவரப்படி 78,573 ஆக உயர்ந்து இருந்தது. அத்துடன், சென்னையில் மட்டும் நேற்று கொரோனாவுக்கு 24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், சென்னையில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,277 பேர் உயிரிழந்துள்ளது தெரிய வந்தது.
மேலும், சென்னை தலைமைச்செயலகத்தில் ஊழியர்கள் சிலருக்கும் கடந்த மாதம் முதல் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. அத்துடன், அதிமுக அமைச்சர்கள் உட்பட தமிழக சட்ட மன்ற உறுப்பினர்கள் 11 பேர் வரை கொரோனாவால் தாக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
குறிப்பாக, அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜூ, கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அமைச்சர் செல்லூர் ராஜூ குடும்பத்தினரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது முகாம் அலுவலகத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நேற்று கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த கொரோனா பரிசோதனை முடிவில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அவரது முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்த, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், “தமிழகம் முழுவதும் 105 பரிசோதனை மையங்களை ஏற்படுத்தி, நேற்று வரை 15 லட்சத்து 85 ஆயிரத்து 782 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும்” தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
அதேபோல், சென்னையில் கொரோனா பாதிப்பால் காவல் துறை உதவி ஆய்வாளர் 55 வயதான குருமூர்த்தி உயிரிழந்தார். எஸ்.ஐ. குருமூர்த்தி மரணத்தைத் தொடர்ந்து, சென்னை காவல்துறையில் போலீசார் உயிரிழப்பு தற்போது 4 ஆக உயர்ந்து உள்ளது.
அத்துடன், சென்னை புழல் சிறையில் இருந்து திருச்சி மத்தியச் சிறைக்கு மாற்றப்பட்ட கைதிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
மதுரை மாவட்டத்தில் மேலும் 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மதுரையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,849 ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் மொத்த உயிரிழப்பு 120 ஆக உயர்ந்துள்ளது. அங்குச் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3803 ஆக அதிகரித்துள்ளது.
அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்த 18 பேரை திடீரென்று பிரசவ வார்டின் அருகில் உள்ள கட்டடத்தில் அனுமதித்ததால், பிரசவ வார்டில் உள்ள கர்ப்பிணிகளின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, பொது முடக்கம் காரணமாக, சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் காற்று மாசு குறைந்துள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.