ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி, 92 சதவீதம் பயன்திறனுடன் உள்ளது! - ரஷ்யா அறிக்கை
By Nivetha | Galatta | Nov 11, 2020, 07:14 pm
கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் சர்வதேச மருத்துவ வல்லுநர்கள் கொரோனாவுக்கு மருந்து தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கண்டுபிடிப்புகளின் ஒருபகுதியாக, ரஷ்யாவில் ஸ்புட்னிக் வி என்ற தடுப்பு மருந்து கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி குறித்த அறிவிப்பு, கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்யாவின் அதிகாரமட்டத்தின் வழியாக கூறப்பட்டது.
இந்த மருந்து குறித்து ஐநா சபையில் ரஷ்ய அதிபர் உரையாற்றிய போது, “கொரோனா வைரஸை கண்டறிந்து சிகிச்சையளிக்க பலவிதமான சோதனை முறைகள், மருந்துகளை ரஷ்யா உருவாக்கியுள்ளது. மேலும், உலகின் முதல் கொரோனா தடுப்பூசியாக ஸ்புட்னிக் வி யை நாங்கள் பதிவு செய்துள்ளோம். கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் நாங்கள் முற்றிலும் வெளிப்படையாகவும், கூட்டாகாகவும் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம்.
கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்குவது தொடர்பாக எங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட விருப்பமுள்ள நாடுகள் பங்கேற்கும் வகையில் கூடிய விரைவில் உயர்மட்ட அளவிலான காணொலி காட்சி கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யலாம்
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஐநா சபையின் அலுவலக ஊழியர்கள் விருப்பத்தின் பெயரில் வந்தால் அவர்களுக்கு எங்கள் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை எந்த ஒரு கட்டணமும் வசூலிக்காமல் இலவசமாக வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று ரஷ்ய அதிபர் கூறியுள்ளார்.
இதன்பிறகு, அடுத்த சில வாரங்களில், கொரோனா வைரஸூக்கு எதிராக தங்கள் நாட்டிலிருந்து 2 - வது மற்றும் 3-வது தடுப்பூசியையும் கூடிய விரைவில் உருவாக்கிவிடுவோம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார்.
அதன்படி, ரஷ்யா சரியாக கடந்த அக்டோபர் 14 கொரோனா வைரஸ் COVID-19 க்கான இரண்டாவது தடுப்பூசிக்கு ஒழுங்குமுறை ஒப்புதல் வழங்கியதாக அறிவித்தது. இதற்கும் அடுத்து, எபிவாகொரோனா (EpiVacCorona) என்ற தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இவற்றில், முறையாக ஒழுங்குமுறை அங்கீகாரத்தைப் பெற்ற உலகின் முதல் தடுப்பூசி ஸ்புட்னிக் வி ஆகும்.
தடுப்பூசி உற்பத்தி பற்றி அந்த நேரத்தில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், "முதல் மற்றும் இரண்டாவது கொரோனா தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடுகிறோம். அதற்காக, எங்கள் வெளிநாட்டு கூட்டாளர்களுடன் தொடர்ந்து அதிகப்படுத்தி வருகிறோம். மேலும், வெளிநாட்டில் எங்கள் தடுப்பூசியை ஊக்குவிப்போம். நோவோசிபிர்ஸ்கை தளமாகக் கொண்ட வெக்டர் மையம் எபிவாகொரோனா என்ற இரண்டாவது கொரோனா வைரஸ் தடுப்பூசியை பதிவு செய்துள்ளது" என்றார்
புதினின் அறிவிப்பு படி, பல நாடுகளிலும் தடுப்பூசிக்கான சோதனைகள் நடைபெற்றன. அதன் முடிவாக, தற்போது ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி 92 சதவீதம் பயன்திறனுடன் உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்தத் தடுப்பூசியின் சோதனைகள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் இரண்டாம்கட்ட சோதனைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி 92 சதவீதம் பயன்திறன் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ, "தடுப்பூசியின் பயன்பாடு மற்றும் மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகள் தொற்றுநோயைத் வெல்வதற்கான மிக வெற்றிகரமான பாதையில் பயணிப்பதை உறுதிப்படுத்துகின்றன" எனத் தெரிவித்தார்.