இந்தியாவில் ஒரு லட்சத்தைத் தாண்டியது கொரோனா உயிரிழப்புகள்!
By Nivetha | Galatta | Oct 03, 2020, 03:11 pm
இந்தியாவில் கொரோனா வைரஸின் வேகமானது, ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றது. கொரோனா உருவாகி 9 மாதங்களுக்கு மேலாகிவிட்டபோதும், இப்போது வரை கொரோனா கட்டுக்குள் வரவில்லை. தொடக்கத்தில் முக்கிய மாவட்டங்களில் அதிகம் பதிவாகிவந்த கொரோனா, அடுத்தடுத்த மாதங்களில் கிராமப்புரங்களில் பதிவாகத்தொடங்கியது. தற்போது, இந்தியாவின் மூலைகளிலும்கூட கொரோனா பதிவாகிறது.
கொரோனாவுக்கான பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கையும் சற்றும் தொய்வில்லாமல் அதிக அளவில் உள்ளது. தினசரி கண்டறியப்படும் புதிய நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை எட்டிய நிலையில், தற்போது அது மெதுவாக குறையத் தொடங்கி உள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 லட்சத்தை நெருங்கியது. மொத்த பாதிப்பு 64,73,545 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 79,476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,069 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,00,842 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 54,27,707 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 75628 பேர் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,44,996 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.56 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 83.84 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில், தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதுவும் குறைந்தபாடில்லை. நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் 5,595 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,08,885 ஆகும். இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்களும் அடங்குவர்.
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 5,603பேர் வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து நல்வாய்ப்பாக குணமடைந்து பூரண உடல் நலத்துடன் வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 5,52,938 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே சென்னையில் 10 இடங்களில் மீண்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கான சிகிச்சை பலனின்றி நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 9,653 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் சர்க்கரை, சிறுநீரகப் பாதிப்பு, இதயப்பிரச்சனை என இணை வியாதிகளுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட வாரியாக என எடுத்துக்கொண்டால் சென்னை, கோவை, செங்கல்பட்டு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாகவும் அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைவாகவும் உள்ளது.
சரி விஷயத்துக்கு வருவோம். இதுவரை கொரோனாவால் இறந்தவர்கள் எத்தனை பேர் மற்றும் நேற்றைய தினம் கொரோனாவால் இறந்தவர்கள் எத்தனை பேர் என்ற எண்ணிக்கையையும் தெரிவித்துள்ளது மத்திய சுகாதாரத் துறை. அதன்படி, நாட்டில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 1076 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதன்மூலம், இதுநாள் வரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. இதில் கடந்த வாரத்தில் மட்டும், சராசரியாக நாள் ஒன்றுக்கு 1065 பேர் உயிரிழந்தனர்.
இதனால் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து இந்தியா இருந்து வருகிறது. கடந்த வாரத்தில், அமெரிக்காவின் சராசரி உயிரிழப்பு 755 ஆகவும், பிரேசில் நாட்டில் 713 ஆகவும் இருந்தது. கொரோனாவால் உயிரிழப்பவர்களில், ஐந்தில் ஒரு மரணம் இந்தியாவில் நிகழ்ந்து வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 12ம் தேதி, இந்தியாவில் முதல் கொரோனா மரணம் ஏற்பட்ட நிலையில், தற்போது 204 நாட்களுக்குள் ஒரு லட்சம் உயிரிழப்புகளை கடந்துள்ளது. இதில் மார்ச் 12 முதல் ஜுலை 16 வரை, முதல் 25,000 மரணங்கள் 127 நாட்களில் நிகழ்ந்தன. பின்னர் ஆகஸ்ட் 15க்குள், அடுத்த 25,000 உயிரிழந்தனர்.
அதன்பின்னர் செப்டம்பர் 9-ம் தேதி உயிரிழப்பு எண்ணிக்கை 75,000 கடந்த நிலையில், தற்போது வெறும் 23 நாட்களில் 25,000 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 56 சதவீத உயிரிழப்புகள், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் பதிவாகியுள்ளன.உயிரிழப்பு 1,00,000 கடந்த போதிலும், இந்தியா இன்னும் மோசமான நிலையை எட்டவில்லை என்று கூறப்படுகிறது. அதன்படி கொரோனாவால் ஏற்படும் 1,00,000 மரணங்களில், இந்தியாவின் சதவீதம் 1.6 இருந்துவருகிறது. இது அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோ,இங்கிலாந்து நாடுகளை விட குறைவாகும்.