இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பானது அதிகரித்துக் கொண்டே போகின்றது. 10,000 - 20,000 என்ற எண்ணிக்கையில் அதிகரித்துக் கொண்டிருந்த நோயாளிகளின் எண்ணிக்கை இப்போதெல்லாம் 30,000 என்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது. விளைவு, நேற்றைய தினம் இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியன் என்றாகியுள்ளது.

மத்திய அரசு, கொரோனாவை சரியாகக் கையாளவில்லை என்றும், அதன் விளைவாகத்தான் இன்றைக்கு இந்தளவுக்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்தவகையில் தமிழகத்தில் திமுக சார்பில், தினந்தோறும் ஏதேனும் ஒரு குறைபாடு மாநில அரசின் பார்வைக்கு வைக்கப்பட்டு விடுவதைப் போல, மத்தியில் ஆளும் அரசை எதிர்த்துக் கேட்கிறது காங்கிரஸ் அரசு.

சில தினங்களுக்கு முன், காங்கிரஸ் அரசு சார்பில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விரைவில் இந்த எண்ணிக்கை 10 லட்சத்தை அடையும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அதேபோல, இப்போது நடந்தும் இருக்கிறது. பத்து லட்சம் என்றானவுடன், ராகுல் காந்தி இப்போது மற்றொரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். அந்தவகையில் இந்தியாவில் ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை  20 லட்சத்தைத் தொடக்கூடும் என்று கூறி எச்சரித்திருத்திருக்கிறார் ராகுல் காந்தி.

ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி இன்று வெளியிட்ட பதிவில், நாட்டில் கொரோனா பாதிப்பு இந்த வாரம் 10 லட்சத்தைத் தாண்டும் எனக் கடந்த 14ம் தேதி தாம் பதிவிட்டிருந்ததாகவும், அதேபோல் தற்போது 10 லட்சத்தைக் கடந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டில் இதே வேகத்தில் கொரோனா தொற்று பரவல் இருந்தால், ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் இந்தியாவில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படுவர் எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். ஆதலால் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க உறுதியான திட்டத்தை வகுத்து அரசு செயல்படுத்த வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா நேரத்தில், பொருளாதாரம் சார்ந்தும் இந்தியா பின்னடைந்து இருப்பதால், அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார் ராகுல் காந்தி.

லாக்டவுன் காலத்தில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவற்றுக்கு நிதியுதவி வழங்கி கைதூக்கிவிட வேண்டும் என்று மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்

லாக்டவுனை சரியான முறையில் அரசு அமல்படுத்தவில்லை என்றும், லாக்டவுனால் பொருளாதாரம் மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார்.

இதுபற்றி பேசிய ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து சிகாகோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டு மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்துள்ளார்.

அதில், ''நகர்ப்புறங்களில் இருக்கும் குடும்பங்களைக் காட்டிலும், கிராமப்புறங்களில் இருக்கும் குடும்பங்கள் ஏழ்மையில் சென்றுவிட்டன. 10 குடும்பங்களில் 8 குடும்பங்களுக்கு லாக்டவுன் காலத்தில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது'' என்று தெரிவித்திருந்தார்.

மேலும் ``சிறு, நடுத்தர நிறுவனங்கள் அழிந்துவிட்டன. பெரு நிறுவனங்களெல்லாம் மிகப்பெரிய பொருளாதார அழுத்தத்தில் சிக்கி இருக்கின்றன. வங்கிகளும் கூட மாபெரும் இக்கட்டான சூழலில் இருக்கின்றன. வங்கிகளின் வாராக் கடன் அதிகரித்து வருவதை நான் முன்னரே குறிப்பிட்டிருந்தேன்.

கொரோனா வைரஸைத் தொடர்ந்து, பொருளாதார சுனாமி இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருக்கிறது என்று சில மாதங்களுக்கு முன்பே எச்சரித்திருந்தேன். ஆனால் என்னுடைய எச்சரிக்கைகளை பாஜக அரசு கேலி செய்து வந்தன. இப்போது, எனது வார்த்தையிலிருந்த உண்மையை ஊடகங்கள் நாட்டு மக்களுக்குக் கொண்டு சென்று எச்சரித்துள்ளன. இதை பார்த்தாவது ஆளும் பாஜக அரசு உடனடி தீர்வுகளை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்

தன்னுடைய அந்த ட்விட்டர் பக்கத்தில், ராகுல் காந்தி ஒரு பொருளாதார ஆய்வறிக்கையையும் இணைத்திருந்தார் அடுத்த நிதியாண்டில் நாட்டில் உள்ள முதல் 500 பெரிய தனியார் நிறுவனங்கள் பெரும் கடனில் சிக்கும், ரூ.1.67 லட்சம் கோடி வாராக் கடன் வங்கிகளுக்கு ஏற்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மற்றொரு ட்வீட்டில் ராகுல் காந்தி குறிப்பிடுகையில், “இந்த உலகம் தன்னைப் போன்றது என்று பிரதமர் மோடி நம்புகிறார். ஒவ்வொருவருக்கும் ஒரு விலை இருக்கும் என்று நினைக்கிறார் அல்லது மிரட்டி, பணிய வைக்க முடியும் என்று நினைக்கிறார். உண்மைக்காகப் போராடுபவர்களுக்கு ஒருபோதும் விலை இல்லை. அவர்களை மிரட்டிப் பணியவைக்க முடியாது என்பதை அவர் ஒருபோதும் புரிந்து கொள்ளமாட்டார்” எனத் தெரிவித்திருந்தார்.

 

- ஜெ.நிவேதா