இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பினால், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிகளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.  இதனால், இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது வரை இந்தியாவில், 12,41,687 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 7,84,460 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 29,906 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 

தமிழகத்தில் 1.86 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாகக் கர்நாடகாவிலும், ஆந்திரப் பிரதேசத்திலும், பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. புதுச்சேரியில் தற்போது வரை 2,421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 1,400 பேர் குணமடைந்த நிலையில், 34 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.  கொரோனாவைத் தடுக்க மத்திய, மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகின்றன. தற்போது, இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்து கோவாக்சின், மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டுவருகிறது. அதேபோல், கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகள், விழிப்புணர்வுகளும் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.  
இந்நிலையில், புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுவதாகப் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில், 1,400 பேர் குணமடைந்த நிலையில், 987 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.  

கடந்த சில தினங்களுக்கு முன்பு, புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அதில், கொரோனா குறித்து பல்வேறு கேள்விகளைப் பலரும் முன்வைத்தனர். அப்போது பதிலளித்த முதல்வர் நாராயணசாமி, மத்திய அரசிடம் கேட்கப்பட்ட கொரோனா நிவாரண நிதி போதுமான அளவு கிடைக்காத போதிலும், புதுச்சேரி அரசிற்குக் கிடைக்கும் வருவாயை மட்டுமே வைத்து, கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். இதனடிப்படையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்துக்கும் 700 ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே அரசு ஊழியர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனாவால் உயிரிழக்கும் பொதுமக்களின் குடும்பங்களுக்கும் 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளதைப் பலரும் வரவேற்றுள்ளனர். 

கடந்த 15-ம் தேதி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் குடும்பத்திற்கு, அவரின் இறுதிச்சடங்கிற்காக உடனடியாக ரூ.15 ஆயிரம் அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

-ஜெ.நிவேதா