`பிளாஸ்மா சிகிச்சை, கொரோனா இறப்பை கட்டுப்படுத்தவில்லை' - ஐ.சி.எம்.ஆர் ஆய்வில் தகவல்
By Nivetha | Galatta | Sep 09, 2020, 03:52 pm
கொரோனா வைரஸ் காரணமாக ஏற்படும் இறப்புகளைக் குறைப்பதற்கு பிளாஸ்மா (சிபி) சிகிச்சை உதவவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.), தற்போது ஒரு ஆய்வு முடிவின் வழியாக வெளிப்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் 39 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சையின் செயல்திறனை ஆராய்ந்து அதன் முடிவுகளை ஐசிஎம்ஆர் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், `கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் பிளாஸ்மா சிகிச்சையானது இறப்பு விகிதத்தை குறைக்கவோ, நோய்த்தொற்றில் இருந்து முற்றிலும் குணமடையவோ பயன்படாது' என்று கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 39 மருத்துவமனைகளில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் PLACID எனும் ஆய்வினை மேற்கொண்டது. இதில், 464 மிதமான தொற்று தீவிரம் கொண்ட நோயாளிகள் ஆய்வில் பங்கேற்றனர். இவர்களின் ஆக்ஸிஜன் செறிவு நிலை 93%க்கும் குறைவாக இருந்தது. இவர்களில், 235 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. மீதமுள்ள 229 பேருக்கு சாதாரண சிகிச்சை வழங்கப்பட்டது. இந்த இரண்டு குழுக்களும் தொடர்ந்து 28 நாட்களுக்கு கண்காணிக்கப்பட்டன.
இதில், பிளாஸ்மா சிகிச்சை பெற்ற 34 நோயாளிகள்(13.6%)பேர் இறந்துவிட்டனர், அதேபோல் பிளாஸ்மா சிகிச்சை பெறாதவர்களில் 31 நோயாளிகள்(14.6%) உயிரிழந்தனர். இரண்டு குழுவிலும் 17 பேருக்கு தீவிர நோய்த்தொற்று இருந்தது.
இதனால், பிளாஸ்மா சிகிச்சை பெரிதாக கொரோனா இறப்பு விகிதத்தைக் குறைக்க உதவவில்லை என்று ஐசிஎம்ஆர் தனது ஆய்வின் மூலமாக தெரிவித்துள்ளது.
பல மாநில அரசுகள் பிளாஸ்மா சிகிச்சையை தீவிரமாக ஊக்குவிப்பதால், இவ்வாறான முடிவுகள் தற்போதைய சூழ்நிலையில் முக்கியத்துவம் பெறுகின்றன என்றும் அதேநேரத்தில் இதுகுறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.
பிளாஸ்மா சிகிச்சை என்பது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை தனியே பிரித்தெடுத்து அதை கொரோனா மிதமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிளாஸ்மா ரத்த தானம் செய்பவர்கள் 18 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். உயர்ரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய், இருதய நோய், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் மற்றும் சிறுநீரக நோய், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிளாஸ்மா தானம் வழங்க இயலாது. மேலும் அவர்கள் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமாகியிருக்க வேண்டும். அதாவது தொற்று இல்லை (நெகடிவ்) என்று பரிசோதனை செய்து 14 நாட்கள் ஆகியிருக்க வேண்டும். அல்லது தொற்று உறுதியாகி குணமடைந்து 28 நாட்கள் ஆகியிருக்க வேண்டும்.
பிளாஸ்மா தானம் செய்பவருக்கு கொரோனாவுக்கான எந்த அறிகுறியும் இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் அவருடைய ரத்தத்தில் உள்ள கொரோனா வைரசுக்கு எதிராக செயல்படுகிற ஐ.ஜி.ஜி. என்ற இம்யூனோ குளோபுளின் ஜி என்ற நோய் எதிர்ப்பு பொருளான ஆன்டிபாடி இருக்கிறதா? என்று முதலில் பரிசோதனை செய்யப்படும். அந்த ஐ.ஜி.ஜி. இருந்தால் மட்டும் தான் அவரது உடலில் உள்ள ரத்தத்தில் இருந்து பிளாஸ்மா எடுக்கப்படும்.
குணமானவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்மாவில் உள்ள ஐ.ஜி.ஜி. ஆன்டிபாடி கொரோனா பாதிக்கப்பட்டவரின் உடலில் செலுத்தி அதன் மூலம் கொரோனா வைரசை கொல்வது தான் பிளாஸ்மா சிகிச்சை. ஆனால் இந்த சிகிச்சை பெறுபவருக்கு நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இருதயநோய், சிறுநீரக கோளாறு போன்ற எந்த நோயும் இருக்கக்கூடாது. ஏனென்றால் ஐ.ஜி.ஜி. ஆன்டிபாடி கொரோனா வைரசை மட்டும் தான் கொல்லும்.