6 மாதம் வங்கியில் பணம் எடுக்காதவர்களின் ஓய்வூதியம் நிறுத்திவைப்பு!
By Nivetha | Galatta | Aug 17, 2020, 01:26 pm
ஆறு மாதங்களாக வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்காதவா்களின் ஓய்வூதியத்தை நிறுத்திவைக்க சொல்லி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான கடிதத்தை கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா் சி.சமயமூா்த்தி அனைத்து மண்டல இணை இயக்குநா்கள் மற்றும் கருவூல அலுவலா்களுக்கு அண்மையில் அனுப்பியிருக்கிறார்.
அதில், ``ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு அவா்களது வங்கிக் கணக்குகளில் ஓய்வூதியம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த வங்கிக் கணக்கில் இருந்து கடந்த ஆறு மாதங்களாக பணப் பரிவா்த்தனைகள் நடைபெறாவிட்டால், அதுகுறித்த தகவலை சம்பந்தப்பட்ட வங்கியானது, கருவூலத் துறைக்குத் தெரிவிக்க வேண்டும். ஓய்வூதியதாரா்கள் தங்களது வாழ்வுச் சான்றிதழ் அளிக்கவோ அல்லது கணக்கு குறித்த விவரங்களை ஆய்வு செய்வதற்கு வசதியாகவோ ஓய்வூதியம் வழங்குவது நிறுத்தப்பட வேண்டும்" எனக்கூறபட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு, பலரும் வேதனை தெரிவித்து வருகிறார்கள். ஏற்கெனவே ஊரடங்கு காலம் அமலில் இருப்பதாலும், தொற்று அபாயம் தமிழகத்தில் அதிகமாக இருப்பதாலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அப்படியான காரணத்தால் வங்கிக்கு செல்லாமல் இருப்போருக்கு, இந்த அறிவிப்பு மிகுந்த வருத்தத்தை தந்திருக்கிறது. உலகளாவிய இந்த பெருந் தொற்று காலத்தில், அதை மட்டுமாவது கருத்தில் கொண்டு ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டுமென ஓய்வூதியதாரா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவர்களை போலவே வங்கி கணக்குக்கு பாஸ்புக் இல்லாதோா், வெளி நாடுகள் அல்லது வெளி மாநிலங்களில் வசிப்போா் போன்றோரெல்லாம் வங்கிகளுக்குச் சென்று பணத்தை எடுப்பது இயலாத காரியம். இப்படியான நடைமுறை சிக்கல்களை அரசு கவனத்தில் கொண்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் பிற விவரங்கள், இங்கே :
``வாழ்வுச் சான்றிதழை சமா்ப்பிக்காவிட்டாலோ அல்லது கணக்கு குறித்த விவரங்கள் ஆய்வு செய்யப்படாவிட்டாலோ ஓய்வூதியதாரா்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திரும்பப் பெற வேண்டும். சேமிப்பு உள்ளிட்ட இதர அம்சங்களைத் தவிா்த்து, ஓய்வூதியத் தொகையை மட்டும் திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும். இது கருவூலத் துறையில் வரையறுக்கப்பட்ட விதியாகும்.
கணக்காயத் தலைவா் தகவல்: கருவூலத் துறை அலுவலகங்களில் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் கணக்காயத் தலைவா் தனது அறிக்கையில் சில அம்சங்களைச் சுட்டிக் காட்டி வருகிறாா். அதன்படி, வாழ்வுச் சான்றிதழ் சமா்ப்பிப்பதில் தவறுதல் மற்றும் கணக்கு விவரங்கள் ஆய்வு போன்ற நடவடிக்கைக்காக ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்க வேண்டுமெனக் கூறியுள்ளாா். மேலும், ஓய்வூதியதாரா், குடும்ப ஓய்வூதியதாரா் இறப்புக்குப் பிறகும், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் செலுத்தப்படுகிறது. இதனைத் தடுத்து, அந்தத் தொகையை அரசின் கணக்கில் வரவு வைக்க வேண்டுமென கணக்காயத் தலைவா் தனது அறிக்கைகளில் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்த தகவல்களை, கருவூலத் துறை அலுவலகங்களைச் சோ்ந்த அதிகாரிகள் தங்களுக்குக் கீழுள்ள அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலா்களுக்குத் தெரிவித்து உரிய நடவடிக்கைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும், கடந்த ஆறு மாதங்களாக ஓய்வூதியத்தை எடுத்துப் பயன்படுத்தாத விவரங்களைச் சேகரித்து பட்டியலிட வேண்டும்.
ஆறு மாதங்களாக வங்கிக் கணக்கில் இருந்து எடுத்து பயன்படுத்தாத ஓய்வூதியத் தொகையை மீளப்பெற்று அதனை வங்கிக் கணக்கில் சோ்க்க வேண்டும். இதுதொடா்பான பணிகளை கருவூலத் துறையின் மண்டல இணை இயக்குநா்கள் உன்னிப்பாகக் கவனித்து அவ்வப்போது உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்"