தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி ஆய்வு! - காரணம் இதுதான்
By Nivetha | Galatta | Sep 09, 2020, 04:17 pm
கொரோனாவிலிருந்து உலகம் முழுவதுமாக விடுபட, தடுப்பூசி கண்டறியப்பட வேண்டும் என்பது மருத்துவத்துவர்கள் சொல்லும் விஷயமாக இருக்கிறது. இதன் அடிப்படையில் தடுப்பூசிகள் கண்டறியும் பணி உலகம் முழுவதும் வேகமாக நடந்து வருகிறது.
ரஷ்யா தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாக கூறிவிட்ட போதும், அது பாதுகாப்பானதாக அறியப்படாமல் இருக்கிறது. இவையாவும் ஒருபுறமிருக்க, உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி தடுப்பூசி ஆய்வில் முன்னனியில் இருப்பதாக சொல்லப்படும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ரா ஜெனெகா கண்டுபிடித்துள்ள தடுப்பூசியான கோவிஷீல்ட் தடுப்பூசிக்கான ஆய்வு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனைகள், இந்தியாவின் சீரம் நிறுவனத்தால் கையாளப்படுகின்றன.
முன்னதாக ``உரிமைகள் வாங்குவதற்கும், இந்தியா மற்றும் பிற 92 நாடுகளில் பிரத்தியேகமாக விற்பனை செய்வதற்கு ராயல்டி கட்டணம் செலுத்துவதற்கும் அஸ்ட்ரா ஜெனெகாவுடன் பிரத்யேக ஒப்பந்தத்தை செய்துள்ளது” என்று கூறியுள்ளது.
மூன்றாம் கட்ட சோதனைகள் இந்தியாவின் 19 க்கும் மேற்பட்ட மையங்களில் நடந்தது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக மகாராஷ்டிராவின் புனே மற்றும் மும்பையிலும், குஜராத்தின் அகமதாபாத்திலும் இந்த முக்கியமான கட்டத்தின் கீழ், 1,600 பேருக்கு தடுப்பூசி வழங்கப்படும் என கூறப்பட்டது.
இதுவொருபுறம் இருந்தாலும், கொரோனா தடுப்பூசியின் உடனடி உலகளாவிய தேவை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே போகிறது. எந்தவொரு தடுப்பூசியும் அல்லது நிறுவனமும் மட்டுமே, உலகளாவிய தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்று சனோஃபி பாஸ்டரின் நிர்வாக துணைத் தலைவர் தாமஸ் ட்ரையம்பே கூறியுள்ளார். இருப்பினும், தடுப்பூசிகள் மட்டுமே முழுமையான தீர்வாக இருக்காது என்று, உலக சுகாதார நிறுவனமும் அறிவித்திருந்தது.
இருப்பினும் தடுப்பூசிக்கான பணிகள் வேகமாகவும் விரைவாகவும் செய்யப்படு வருகிறது. உலகளைவில் 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தடுப்பூசி கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவிலும் கொரோனாவுக்கான பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதில் ஒரு பகுதியாக, ஆக்ஸ்ஃபோர் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசிக்கான உலகளாவிய மக்கள் மீதான சோதனையிலும், இந்தியா பங்கெடுத்து வருகின்றது.
அதன்படி, இந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனையில் முதல் 2 கட்ட பரிசோதனைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், மூன்றாம் கட்ட பரிசோதனை நடைபெற்றது. அந்த, 3ம் கட்ட பரிசோதனையில், தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியை மதிப்பாய்வு செய்ய வேண்டி உள்ளதாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘மருந்து சோதனைகளில் விவரிக்கப்படாத நோய் ஏற்படும்போதெல்லாம் இதுபோன்று பரிசோதனை நிறுத்தி வைப்பது வழக்கமான நடைமுறைதான். தீவிரமாக ஆராய்ந்து, சோதனைகளின் நேர்மையை பராமரிப்பதை உறுதிசெய்கிறோம். மிகப்பெரிய அளவில் சோதனைகள் செய்யப்படும்போது, சில சமயம் நோய்கள் தற்செயலாக ஏற்படும். ஆனால் அவை சுயாதீனமாக மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்’ என்று அஸ்ட்ராஜெனெகா நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
ஆனால், பரிசோதனையின்போது பாதிக்கப்பட்டவர் எங்கு இருக்கிறார், அவரது நோயின் தன்மை மற்றும் தீவிரம் ஆகியவை குறித்து உடனடியாகத் தெரியவில்லை.
கொரோனா தடுப்பூசிக்கான 3-வது கட்ட சோதனைகள் மேற்கொண்டிருக்கும் 9 நிறுவனங்களில் அஸ்ட்ராஜெனெகா நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தின் தடுப்பூசி இந்தியா மட்டுமன்றி, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் சோதனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.