அதிக கொரோனா பாதிப்பில், இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய இந்தியா - இன்னும் மோசமாகுமா நிலை?
By Nivetha | Galatta | Sep 07, 2020, 05:41 pm
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2,72,89,725 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 70,28,461 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 59,962 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 1,93,73,714 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 8,87,550 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இருந்த பிரேசிலை பின்னுக்குத் தள்ளி, 2வது இடத்தைப் பிடித்துள்ளது இந்தியா. அதேவேளையில் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறையினர் தெரித்துள்ளனர்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள் படி, கடந்த 24 மணிநேரத்தில் 90 ஆயிரத்து 802 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 42.4 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 1,016 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 71,642 ஆக அதிகரித்துள்ளது.
உலகளவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்காவும், பிரேசில், இந்தியா, ரஷ்யா, பெரு ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் இருந்தன. அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் 64.60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 250 பேர் உயிரிழந்தனர். 2வது இடத்தில் பிரேசில் இருந்த நிலையில், இந்தியா அந்நாட்டை முந்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் 42.4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பிரேசிலில் 41.37 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பிரேசலில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 686 பேர் உயிரிழந்தனர். பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் 14 ஆயிரத்து 606 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். 456 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே பிரேசிலில் உயிரிழப்பும், பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. ஆனால், இந்தியாவில் பாதிப்பும் உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
``இந்தியாவில் 42.4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும், 32.5 லட்சம் பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 69 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இருப்பினும் கொரோனா நோயாளிகள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றனர். குறிப்பாக, அதிகமான கொரோனா நோயாளிகள் நாள்தோறும் மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகா, உத்தரப்பிரதேசம்,ஆந்திரபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில்தான் கண்டறியப்படுகின்றனர்"
இப்படியான சூழலில் நாடு முழுவதும் லாக்டௌன் தளர்வு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இது, சூழலை மேலும் மோசமாக்கும் என கணிக்கின்றனர் மருத்துவர்கள். ஏற்கெனவே அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் விளைவுதான், இப்போது இவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.