கொரோனாவோடு சேர்த்து, பருவ கால நோய்களோடும் போராடும் உலக நாடுகள்! - ஸ்தம்பிக்கும் சுகாதார கட்டமைப்புக
By Nivetha | Galatta | Aug 05, 2020, 07:03 pm
அமெரிக்கா, கொரோனா வைரஸால் மிகக் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. மிகவும் மோசமான நெருக்கடிக்கு மத்தியில் அமெரிக்காவில், இதுவரை 1,55,000 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``மக்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான். இதனால், எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்யவில்லை என்று அர்த்தமாகாது. எவ்வளவு இதனைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியுமோ அவ்வளவு கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம். இது ஒரு பயங்கரமான தொற்று நோய்” என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இதுவரை 47 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அமெரிக்க குழந்தைகள் மத்தியில் அரியவகை நரம்பியல் குறைபாடொன்றும் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்க சுகாதாரத்துறையினரின் சார்பில் இதுகுறித்து எச்சரிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அக்யூட் ஃப்ளேசிட் மைலிட்டிஸ் (acute flaccid myelitis) எனப்படும் அந்த நரம்பியல் குறைபாடு, வைரஸால் ஏற்படும் பாதிப்பு என்றும், அது இரண்டாட்டுக்கு ஒருமுறை பரவும் என்றும் கூறப்படுகின்றது. இந்த வருடம், இதன் பாதிப்பு அதிகரிமாக இருக்கும் என்று அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் கணித்துள்ளது.
குழந்தைகளை குறிவைத்து தாக்கும் இந்த வைரஸ், நிரந்தரமாக அவர்களை முடக்குவாதத்துக்குள் கொண்டு செல்லகூடிய அளவுக்கு ஆபத்தானது. மேலும் மூச்சுக்குழாய் தொடர்பான பிரச்னைகளுக்கு வழிவகுத்து உயிரிழப்பு கூட நேரிடலாம் என சொல்கிறார்கள் மருத்துவர்கள். அதனாலேயே இந்த வகை பாதிப்புக்கு, உடனடியான அவசரகால மருத்துவ உதவிகள் தேவைப்படும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.
இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை என்ற விகிதத்தில், ஆகஸ்டு முதல் நவம்பர் வரை இந்த ஏ.எஃப்.எம். பாதிப்பு அமெரிக்காவில் உச்சத்தில் இருப்பது வழக்கம். ஐந்து வயதுக்குட்பட்டவர்களே, இதனால் அதிகம் பாதிக்கப்படுவர். ஆகவே இந்த நேரத்தில் பெற்றோர் தங்கள் குழந்தைகள் உடல்நலன் மீது மிக கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவை போலவே, ஒவ்வொரு நாடும் - ஒவ்வொரு இடமும் தங்களின் பருவகால நோய்களோடு போராடுவதுதான், இப்போதைக்கு பெரும் சவாலாக இருக்கிறது.
உதாரணத்துக்கு, நம் தமிழகத்திலும்கூட, இது டெங்கு நோய்ப் பரவலுக்கான நேரம். அதனால் நம் சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது இரு வேறு நோய்களோடு போராடிக்கொண்டிருக்கிறது. தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இதுபற்றி பேசும்போது, ``டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், உள்ளாட்சி அமைப்பு நிா்வாகிகள், சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும், காய்ச்சல் முகாம்களில் கொரோனாவுடன், டெங்கு, டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள களப்பணியாளா்களை, டெங்கு தடுப்பு பணிகளிலும் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருந்துகளும், வசதிகளும் அரசிடம் உள்ளன. டெங்கு கொசுக்கள் பரவாத வண்ணம் பொதுமக்கள் விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும்" என்று கூறியிருக்கிறார் அவர்.
டெங்கு மற்றும் கொரோனாவுக்கு ஒரேபோல அறிகுறிகள் தெரிவதால், மிகவும் மோசமான போக்குதான் இங்கும் நிலவி வருகிறது.
இப்படி உலகம் முழுக்க, ஒவ்வொரு நாடும் கொரோனாவோடு சேர்த்து, பருவகால நோயுடனும் போராடி வருகின்றது. இதையெல்லாம் அறிந்ததாலோ என்னவோ, உலக சுகாதார நிறுவனம் தொடர்ச்சியாக அனைத்து நாட்டு அரசிடமும் `உங்களின் சகாதார கட்டுப்பாடுகளை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். பலப்படுத்திக் கொள்ளுங்கள். வரும் நாள்கள் மிக மோசமாக இருக்கலாம்' என்று தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டிருக்கிறது.