தமிழகத்தில் கண்டறியப்படும் கொரோனா தடுப்பூசியின் அடுத்தடுத்தகட்ட ஆய்வுக்கு, ஐசிஎம்ஆர் அனுமதி!
By Nivetha | Galatta | Oct 20, 2020, 02:49 pm
கோவிட் - 19 கொரோனா வைரஸுக்கு, தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் அனைத்தும் மிகத்தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அவற்றில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கோவிஷீல்டு தடுப்பு மருந்து தற்போதைக்கு முன்னணியில் இருக்கிறது.
இந்தியாவின் பாரத் பயோடெக் கண்டுபிடித்த கோவேக்சின் மருந்து, பல்வேறு கட்ட சோதனைகளில் வெற்றி பெற்று, தற்போது மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்திலும் தடுப்பு மருந்துக்கான சோதனைகள் நடந்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக, சென்னை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைகழக ஆராய்ச்சி மையமும் தடுப்பு மருந்து கண்டறியும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.
எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக ஆய்வு மையம் செய்துவரும் தடுப்பு மருந்து ஆய்வின் முதற்கட்ட சோதனைகள் முடிக்கப்பட்டு அதன் ஆய்வு அறிக்கை இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்திற்கு அனுப்பப்பட்டது. இதனை ஆய்வு செய்த ஐ.சி.எம்.ஆர் முதற்கட்டமாக விலங்குகளிடம் அந்த மருந்தை பரிசோதனை செய்ய அனுமதியை வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து சிறு விலங்கினங்கள் ஆன முயல், எலி போன்ற விலங்குகளிடம் பரிசோதனை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றி பெறும் பட்சத்தில் அடுத்த கட்டமாக மனிதர்களிடம் இந்த மருந்து சோதனை செய்ய அனுமதி பெறப்படும்.
இதன்மூலம், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் கடந்த மார்ச் மாதம் முதல் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்து தற்பொழுது விலங்குகளிடம் பரிசோதனை செய்யும் முயற்சிக்கு ஐசிஎம்ஆர் அனுமதியளித்துள்ளது. எலி, முயல் உள்ளிட்ட சிறிய விலங்குகளுக்கு செலுத்தப்படும் இந்த பரிசோதனை விரைவில் துவங்கப்பட உள்ளது. இதில் வெற்றி பெற்றவுடன் அடுத்தகட்ட சோதனை துவங்கும் என டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
மூன்று தினங்களுக்கு முன்னர்தான் (அக்டோபர் 17) கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க உறுதியான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நாட்டில் தற்போதுள்ள கொரோனா நிலவரம் குறித்து, இன்று பிரதமர் மோடி, உயர்மட்டக் குழு ஆலோசனைக்கு ஏற்பாடு செய்திருந்தார். அப்போது, கொரோனா தடுப்பூசி பணிகளை துதரிதப்படுத்துவது குறித்து ஆலோசித்தார்.
அப்போது, அனைத்து மக்களுக்கும், கொரோனா தடுப்பூசி கொண்டு சென்று சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது எப்படி என்பது குறித்து அப்போது அவர் கேட்டறிந்தார். தேர்தல் காலத்தில் எப்படி அரசு இயந்திரம் முழுக்க பயன்படுத்தப்படுகிறதோ, அப்படி, தடுப்பூசி அனைவருக்கும் சென்று சேரவும், வினியோகிக்கவும், அனைத்து துறை அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் குடிமக்கள் குழுக்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று மோடி வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். தடுப்பூசியை அனைவருக்கும் வினியோகிப்பது எப்படி என்பது பற்றி இக்கூட்டத்தில் அதிகம் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பிறகு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், "மூன்று தடுப்பூசிகள் இந்தியாவில் முக்கிய கட்டங்களில் உள்ளன, அவற்றில் இரண்டு இரண்டாம் கட்டத்திலும், ஒன்று மூன்றாம் கட்ட சோதனைகளிலும் உள்ளன. இந்திய விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி குழுக்கள் அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், பூட்டான், பங்களாதேஷ், மாலத்தீவு, மொரீஷியஸ், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் ஆராய்ச்சி திறன்களை பலப்படுத்துகின்றன, என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தடுப்பூசி போக்குவரத்து, சேமிப்பு வசதிகள், தடுப்பூசி செலுத்த தேவைப்படும் சிரஞ்ச் போன்ற உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தடுப்பூசி தொடர்பாக, அனைத்துக்குமான ஏற்பாடுகளை தீவிரகதியில் முன்னெடுக்க வேண்டும்" என்று மோடி வலியுறுத்தியுள்ளார்.