`இந்தியாவில் ஹெர்டு இம்யூனிட்டி மேற்கொள்ளப்படாது!' - மத்திய சுகாதாரத்துறை திட்டவட்டம்
By Nivetha | Galatta | Jul 31, 2020, 01:36 pm
இந்தியாவில் ஆறாம்கட்ட லாக்டௌன் தளர்வுகள், நாளை முதல் அமலுக்கு வரவிருக்கின்றது. தொடர்ச்சியாக பல மாதங்களாக முடக்கத்துக்குள்ளேயே வசிக்கிறோம் நாம். ஒவ்வொரு முறை லாக்டௌன் தளர்வு அறிவிக்கப்படும்போதும், `கொரோனாவோடு வாழப் பழகுங்கள்' என்ற அறிவுரை முன்னிறுத்தப்படுகிறது. 'இது, மக்களின் குழு எதிர்ப்பாற்றல், அதாவது ஹெர்டு இம்யூனிட்டியின் மீது நம்பிக்கை வைத்து எடுக்கப்படும் முயற்சி. கோவிட்-19 வைரஸிடமிருந்து மக்களை தனிமைப்படுத்துவதற்குப் பதிலாக, கோவிட்-19 தொற்றை மக்கள் பெற அனுமதிப்பது. அதன்மூலம், இயற்கையாக கொரோனா தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடியை அவர்களைப் பெறவைப்பது' என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
கோவிட்-19-க்கு தடுப்பூசியோ, மருந்தோ கண்டுபிடிக்க இன்னும் காலம் ஆகலாம் என்ற நிலையில், பொருளாதார முடக்கத்திலிருந்து நாடு விடுபட லாக்டௌன் தளர்வன்றி வேறு வழியில்லை. இந்த இக்கட்டான சூழலில், 'ஹெர்டு இம்யூனிட்டி இந்திய மக்களைக் காக்கும்' என்ற நம்பிக்கையே விஞ்சி நிற்கிறது.
இதை தமிழில், குழு நோய் எதிர்ப்பு சக்தி / மந்தை நோய் எதிர்ப்பு சக்தி என சொல்வதுண்டு.
இதற்கான விளக்கம் - `குறிப்பிட்ட ஒரு நிலப்பரப்புள்ள இருக்க பெரும்பான்மையான மக்கள், குறிப்பிட்ட ஒரு நோய்க்கான எதிர்ப்புத் திறனை, அதாவது நோய்க்கான எதிர்ப்புரதத்தைப் பெறுவது. இந்த இடத்துலதான் நாம ஒருவிஷயத்தை புரிஞ்சுக்கணும். அது என்னன்னா, நோய்க்கான எதிர்ப்புரதம், எடுத்தவுடனே பெரும்பான்மையான மக்களுக்கு கிடைச்சிடாது. ஒவ்வொரு தனிநபருக்குக் கிடைக்கணும். இப்படி, அந்தச் சமூகத்தில் இருக்கும் பெரும்பான்மை மக்களுக்கு எதிர்ப்புத்திறன் கிடைக்கணும். அப்படி கிடைக்கும் நோய் எதிர்ப்புத்திறன்தான், ஹெர்டு இம்யூனிட்டி எனப்படும்'
ஹெர்டு இம்யூனிட்டி உருவாவதில், இரண்டு வழிகள் இருக்கிறது.
* முதல் வகை, எதிர்ப்புப்புரதத்தை மருந்தாக தயாரித்து, அந்த தடுப்பு மருந்தை தடுப்பூசி மூலமாக உடலுக்குள் செலுத்துவது. இப்படி செலுத்துவதன் மூலமாக, ஒருவேளை கிருமித்தொற்று நமக்கு ஏற்பட்டாலும்கூட, உடல் அதற்கு எதிராக போராடி, அந்த தொற்று மேற்கொண்டு நோயாக மாறிவிடாமல் நம்மை தற்காத்துடும்.
* இரண்டாவது வகை, எதிர்ப்புரதம் இயற்கையாக உடலில் உருவாகணும். அப்படி இயற்கையாக அது உருவாக, அதற்கு நமக்கு நோய் வந்து - நோயிலிருந்து முற்றிலுமாக முழுவதுமாக நாம் மீண்டிருக்க வேண்டும்.
இந்த இரண்டில், கொரோனாவுக்கு ஹெர்டு இம்யூனிட்டி உருவாவதில் முதல் வகைதான் சிறந்தது மற்றும் பாதுகாப்பானது. அதாவது, தடுப்பூசி கிடைக்கப்பெறுவதுதான் சிறப்பு. அப்படியில்லாமல், இரண்டாவது வகையில் செயல்பட்டால், அதில் நிறைய சிக்கல்கள் இருக்கிறது. குறிப்பாக, நோய் நமக்கு ஏற்பட்ட பிறகு, அதுல இருந்து மீளும் விகிதம் எவ்வளவு என்பது நமக்கு உறுதியாக தெரியாது. ஸோ, மீளலாம்.... மீளாமலும் போகலாம்! ஒருவேளை மீண்டுவிட்டாலும், நோய் நம்ம உடலில் வேறு ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால், அதுவும் சிக்கல்தான்.
இந்தக் கருத்தை, கடந்த சில தினங்களுக்கு முன் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞாணி சௌமியா சுவாமிநாதன் கூறியிருந்தார். சௌமியா சுவாமிநாதன் கூறிய விஷயம் இதுதான் - ``கொரோனாவுக்கான இயற்கை நோய் எதிர்ப்பு திறன் உருவாக, ஏறத்தாழ 70 -80 % வரை நோயிலிருந்து மீண்டு - அவர்கள் உடலில் எதிர்ப்புரதம் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், இன்று கொரோனா பாதித்தவரையே கூட மீண்டும் மீண்டும் பாதிக்கிறது. இதனால் எதிர்ப்புரதம் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை குறைகின்றது. சில நாடுகளில், 5 முதல் 10 சதவிகிதம் பேருக்குத்தான் கொரோனா எதிர்ப்புரதம் இருக்கிறது. அதிகபட்சமாக சில நாடுகளில் 20 சதவிகிதம் வரை இருக்கிறது. இது 70 - 80 என்றாகும் வரை, இயற்கை எதிர்ப்புரதத்துக்கு, சாத்தியமில்லை. இந்த எண்ணிக்கை அவ்வளவு தூரம் உயர்வதற்குள், பலரும் உயிரிழக்கும் அபாயமும் இருக்கிறது. உயிரிழப்பு ஏற்கெனவே அதிகமாகத்தான் இருக்கிறது என்பதால், தயவுசெய்து யாரும் இந்த ரிஸ்க்கை எடுக்க வேண்டாம்"
பிற நாடுகள் எப்படியோ, இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள், மேற்சொல்லப்பட்டுள்ள இரண்டாவது வகை முன்னெடுப்பை எடுத்து விடவேகூடாது என்பதுதான் அறிவியலாளர்களின் பெரும் அறிவுரையாக இருந்தது. இந்த நிலையில், நேற்று மத்திய சுகாதாரத்துறை, இந்த முன்னெடுப்பை நாம் எடுக்க மாட்டோம் என கூறியிருக்கிறது.
இது குறித்து மத்திய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், ``இந்தியா போன்ற மக்கள்தொகை உள்ள நாட்டில், மந்தை நோய் எதிர்ப்பு சக்தி ஒரு யுக்தி சார்ந்த தேர்வாகவோ அல்லது விருப்பமாக இருக்க முடியாது. மீறி செய்துவிட்டால் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும். இதற்கு நாம் அதிக விலை கொடுக்க வேண்டியதிருக்கும். ஆகவே இந்த முன்னெடுப்பை நாம் எடுக்கப்போவதில்லை" எனக்கூறியுள்ளார்.
ஆம், இந்தியா இதை நோக்கி நகரக்கூடாது! நகர்ந்தால், பேரழிவு நிச்சயம்.