கொரோனாவில் இருந்து மீண்ட தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கொரோனா!
By Nivetha | Galatta | Jul 11, 2020, 04:48 pm
கொரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில், இதன் பரவும் விகிதம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. காற்றின் மூலமாகக்கூட கொரோனா பரவலாம் எனக்கூறி உலக சுகாதார நிறுவனம் நேற்றைய தினம் அறிவித்துவிட்டது.
என்னதான் கொரோனா வேகமாக பரவும் என்றாலும், தாயிடமிருந்து பச்சிளம் குழந்தைக்கு கொரோனா வருவது பற்றிய தெளிவான முடிவுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
இந்த நிலையில், இப்போது உலகிலேயே முதல் முறையாக கருவில் இருக்கும் சிசுவுக்கு கொரோனா பாதிப்பு தாய் மூலம் ஏற்பட்டிருப்பதாக டெல்லியின் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். சோகம் என்னவென்றால், தாய் குணமான பிறகான காலகட்டத்தில், அவரிடமிருந்து குழந்தைக்கு தொற்று பரவியிருக்கின்றது.
இதற்கு முன்னும் பல பச்சிளம் குழந்தைகளுக்கு கொரோனா ஏற்பட்டிருக்கிறது என்றாலும்கூட, அக்குழந்தைகளுக்கு கொரோனா பாதித்த வேறு நோயாளிகள் மூலம்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மாறாக, குணமான கொரோனா பாதித்த தாய்க்குப் பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா இருப்பதென்பது, இதுவரை எங்கும் நடக்காத செய்தியாக இருக்கிறது.
இந்த சம்பவத்தில், ஜூன் 11ம் தேதி சம்பந்தப்பட்ட 24 வயது கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்திருக்கிறது. அதற்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு 25ம் தேதி மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோதும், கொரோனா இருப்பதாகவே தெரியவந்துள்ளது. பிறகு ஜூலை 7ம் தேதி மீண்டும் பரிசோதித்ததில் கொரோனா இல்லை என்று பரிசோதனை முடிவு வந்தது.
சரியாக ஜூலை 8-ம் தேதி இரவு கர்ப்பிணிக்கு சுகப் பிரசவத்தில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 6 மணி நேரத்தில் ஆர்டி-பிசிஆர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டதில், குழந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தை நலமாக இருக்கிறது. குழந்தைக்கு எந்த அறிகுறியும் அந்த நேரத்தில் தெரியவரவில்லை.
இதைத்தொடர்ந்து, கொரோனாவில் இருந்து குணமடைந்த தாயின் உடலில் இருந்த காரணத்தினால், சிசுவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என, தாய்க்கு சிகிச்சையளித்த மருத்துவர் கீர்த்தி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஏனெனில், தாய் குணமானது தெரியவந்த அடுத்த நாளே குழந்தை பிறந்திருக்கிறது. ஆகவே குழந்தைக்கு வெளியில் இருந்து கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட எந்த வழியும் இல்லை என்பது மருத்துவர்களின் கருத்து.
என்னதான் தாயிடமிருந்து குழந்தைக்கு கொரோனா ஏர்படும் என இம்மருத்துவர்கள் சொல்லப்பட்டாலும், இந்த மாதிரியான கொரோனா தொற்று பரவல் இன்னமும் நிரூபிக்கப்படாமலேயே இருக்கிறது. அதனால் இதை எண்ணி கர்ப்பிணிகள் யாரும் பயப்பட வேண்டாம் எனக்கூறியிருக்கிறார்கள் அவர்கள்.
அதேசமயம், தாயிடமிருந்து குழந்தைக்கு பரவாது என்பதற்கான உதாரணங்களும் இந்தியாவில் பரவலாக நடந்து வருகிறது. கடந்த மே மாதம்கூட மும்பையில் ஒரு மருத்துவமனையில் 100க்கும் அதிகமான குழந்தைகள், தங்கள் தாய்மார்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தபோதும் நல்ல உடல் நலத்துடன் பிறந்துள்ளன.
லோக்மான்ய திலக் அரசு பொது மருத்துவமனையில் பிறந்த 115 குழந்தைகளில் மூன்று குழந்தைகளுக்கு கடந்த மாதம் முதலில் பரிசோதனை செய்யப்பட்ட போது கோவிட்-19 தொற்று இருப்பதாக காட்டியது. ஆனால் அடுத்தடுத்த சோதனைகள் அக்குழந்தைகளுக்கு தொற்று இல்லை என தெளிவுபடுத்தின என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஆகவே கர்ப்பிணிகள் அச்சமின்றி இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. கர்ப்ப காலத்தில், குறிப்பாக பிரசவத்தை நெருங்கும் பெண்கள் தங்களின் உடல்நலனில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது மட்டும் மிகவும் அவசியமாக இருக்கிறது. முடிந்தவரை இப்படியான பெண்கள், தங்களைத்தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது என்கிறார்கள் சில மருத்துவர்கள்.
கர்ப்ப காலத்திலுள்ள பெண்கள், அடிக்கடி பரிசோதிப்பது தாய் மற்றும் குழந்தைக்கு இன்றியமையாத தேவைகளாக இருக்கும். இருப்பினும், இப்படியான பரிசோதனைகளை செய்துகொள்ள, நேரடியாக மருத்துவமனைகளுக்கு செல்லாமல் ஆன்லைன் அமர்வுகளில் உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் கேட்டு அறிந்து கொள்வது சிறப்பு.
- ஜெ.நிவேதா.