கொரோனாவை தடுப்பதில், மாஸ்க் அணிவதும் - சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் மிகமிக முக்கியமான விஷயமாகப் பார்க்கப்பட்டு வருகின்றது. அப்படியிருக்கையில், நேற்றைய தினம் மாஸ்க் அணிவதற்கு நிறையக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. குறிப்பாக வால்வு பொருந்திய என் 95 மாஸ்க் உபயோகம் குறித்து மருத்துவர்கள் தரப்பில் நிறைய விவரங்கள் அளிக்கப்பட்டது.  முடிந்தவரை இந்த வகை மாஸ்க்குகளை உபயோகப்படுத்த வேண்டாம் எனச் சொல்லப்பட்டது.

இதற்கிடையே, என் 95 மாஸ்க்கை, முழுவதுமாக ஒதுக்கிவிட வேண்டாம் என்றும் அதை எப்படியெல்லாம் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது என்பது குறித்தும் தமிழகத்தைச் சேர்ந்த பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லா, நம்மிடையே விரிவாக சில தகவல்கள் கூறியிருக்கிறார்.

``வால்வுடன் கூடிய N95 முகக்கவசங்கள் நோய் பரவுவதைத் தடுப்பதில்லை எனவும் அதை அணிய வேண்டாம் என்றும் கூறியிருக்கிறது மத்திய சுகாதாரத்துறை. N95 என்று இதற்குப் பெயர் வருவதற்குக் காரணம், இந்த முகக்கவசத்தில் இருக்கும் நுண் துகள்கள் வைரஸை 95% ஐ வடிகட்டிவிடும். அதனால் ஒருவருக்கு வெளியிலிருக்கும் கொரோனா வைரஸ், சுவாசத்துக்குள் வராது. இந்தக் காரணத்தினால்தான் முக்கியமாக மருத்துவ ஊழியர்கள் இந்த முகக்கவசத்தை அதிகம் வாங்கி அணிகின்றனர். மருத்துவப் பணியாளர்களைப் பார்த்து, பொதுமக்களிடையேயும் இதன் பயன்பாடு அதிகரித்திருக்கிறது . 

மாஸ்க்கில், சில வகைகள் இருக்கின்றன. அவற்றின் விவரங்கள் இங்கே...

* N95 மாஸ்க் -  N95 முகக்கவசமானது "இருபக்க பாதுகாப்பைத் தரவல்லது", அதாவது இதை அணிந்திருப்பவருக்கும் எதிர் இருப்பவருக்கும் பாதுகாப்பு தரும். 

இதை அணிந்து கொண்டு ஒருவர் இருமினால் தும்மினால் எதிரில் இருக்கும் ஒருவருக்குக் கிருமி கடத்தப்படாது 

மேலும் இதை அணிந்திருக்கும் போது எதிரில் இருப்பவரிடம் இருந்து வரும் வைரஸையும் இது தடுக்கும் வல்லமை கொண்டது என்று அறியப்படுகிறது. நம்பப்படுகின்றது. 

 

* சர்ஜிகல் மாஸ்க் என்றும் 3Ply surgical mask - இது அணிந்திருப்பவருக்குப் பாதுகாப்பு தராது. ஆனால், எதிரில் இருப்பவருக்கு நோய்த் தொற்று தரும் வைரஸ் பரவாமல்  தடுக்கும். அதனால் அதை "ஒரு பக்க பாதுகாப்பு"என்று அழைப்போம். 

அதாவது சர்ஜிகல் மாஸ்க் அணியும் ஒருவர் இருமினால் தும்மினால் அவரிடம் இருந்து வைரஸ் பிறருக்குச் செல்லாது. 

ஆனால் எதிர் இருப்பவர் இருமினால் தும்மினால் சர்ஜிகல் மாஸ்க் அணிந்திருப்பவருக்குக் குறைந்த ஆபத்து உண்டு. 

ஆனால் எந்த மாஸ்க்கும் அணியாமல் இருப்பவரை விட ஆபத்து குறைவே. 

 

* மூன்றடுக்கு துணிக்கவசம் - இது ஓரளவு நம்மிடம் இருந்து நோய் பிறருக்குப் பரவாமலும் பிறரிடம் இருந்து நமக்கு நோய்த் தொற்று வராமலும் தடுக்கும். 

எந்த முகக்கவசமும் அணியாதவரை விட துணியால் ஆன மூன்றடுக்கு முகக்கவசம் அணிந்தவருக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைவு .

 

ஒப்பீட்டளவில், இந்த மூன்றில் வால்வு வைத்த என் 95 மாஸ்க் சிறந்ததாகப் பார்க்கப்பட்டாலும், ஏன் சுகாதாரத்துறை அதை வேண்டாமென சொல்ல வேண்டும் என நாம் நினைக்கலாம். அதற்கான காரணம் இங்கே...

இந்த வால்வு வைத்த N95 மாஸ்க்குகளை அணிந்திருப்பவர் இருமும் போதும் தும்மும் போதும் அவரிடம் தோன்றும் வைரஸை வெளியே வால்வு வழியாகக் கசியவிடுகின்றது. இதனால் எதிர் இருப்பவருக்கு நோய் பரவும் வாய்ப்பு இருக்கின்றது. மேலும் அந்த வால்வுகள் ஒருபக்கமாகத் தடுக்கும் வால்வுகளாக இருப்பதால் வெளியே இருந்து உள்ளே வரும் கிருமிகளைத் தடுக்கும் விதத்தில் உள்ளன. இன்னும் தரம் குறைந்த N95 மாஸ்க்குளாக இருப்பின் அந்த வால்வுகள் வெளியே இருந்து உள்ளே வரும் கிருமிகளையும் முறையாகத் தடுக்காமல் விடும் வாய்ப்பும் இருக்கின்றது. இதனால் வால்வுடன் கூடிய N95 மாஸ்க்குகள் அணிய வேண்டாம் என்று சுகாதாரத்துறை கூறுகின்றது 

 

ஆனால், `இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே நான் அதிக பொருட்செலவில் வால்வுடன் கூடிய N95 மாஸ்க் வாங்கி விட்டேன், இனி என்ன செய்வது' என்று சிலர் கேட்கலாம்.  

அப்படியானவர்களுக்கு டிப்ஸ் இதோ...

* மெடிக்கல் கடைகளில் பேப்பர் ப்ளாஸ்டர் வாங்கி அந்த வால்வு இருக்கும் பகுதியை  நன்றாக அடைத்து ஒட்டி விடுங்கள். இப்போது உங்கள் மாஸ்க் வால்வு இல்லாத N95 ஆக மாறிவிடும். பேப்பர் ப்ளாஸ்டர் கிடைக்காவிடில் செல்லோ டேப் கொண்டு நன்றாக அந்த வால்வுகளை அடைத்து விடுங்கள்.  

* N95 மாஸ்க்குக்கு மேலே 3Ply surgical மாஸ்க் அணிந்தால் உங்களிடம் இருந்து வால்வு வழியாக வெளியேறும்   தொற்றை 3PLY surgical mask தடுத்து விடும். இப்போது உங்களது மாஸ்க் பாதுகாப்பானதாக மாறிவிடும் 

* சர்ஜிக்கல் மாஸ்க் வாங்க இயலாதவர்கள் மூன்றடுக்கு கொண்ட துணி மாஸ்க்கை வைத்து N95 முகக்கவசத்தை மூடிக்கொள்ளுங்கள்.  இப்போதும் அந்த துணிக்கவசம் உங்களது வால்வை மறைப்பதால் பிறர் பாதுகாப்புக்குக் குந்தகம் ஏற்படாது. 

வாங்கி வைத்த N95 வால்வு உள்ள மாஸ்க்குளை தூக்கி எறிய வேண்டியதில்லை. அவற்றில் மேற்சொன்ன சிறு மாற்றம் செய்து உபயோகப்படுத்தமுடியும். 

 

இதனால் நமக்கும் பாதுகாப்பு, பிறருக்கும் பாதுகாப்பு. 

நோய் நமக்கும் வராமல், பிறருக்கும் பரவாமல் தடுக்கமுடியும்" 

 

- ஜெ.நிவேதா