தடுப்பூசி கண்டுபிடிப்பதற்குள், 20 லட்சம் மக்கள் கொரோனாவால் இறப்பார்கள்! - WHO வின் அதிர்ச்சி தகவல்
By Nivetha | Galatta | Sep 26, 2020, 05:36 pm
உலகின் பல்வேறு நாடுகளில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்தவண்ணம் உள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 9 லட்சத்து 94 ஆயிரத்து 16 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.
உலக முழுவதும் பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. ரஷியாவில் கடந்த மாதம் கொரோனாவிற்கு தடுப்பூசி தயாரித்து விட்டதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்திருந்தார். அமெரிக்காவும் தடுப்பூசி தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகிறது.
கொரோனாவிலிருந்து உலகம் முழுவதுமாக விடுபட, தடுப்பூசி கண்டறியப்பட வேண்டும் என்பது மருத்துவத்துவர்கள் சொல்லும் விஷயமாக இருக்கிறது. இதன் அடிப்படையில் தடுப்பூசிகள் கண்டறியும் பணி உலகம் முழுவதும் வேகமாக நடந்து வருகிறது.
கொரோனா தடுப்பூசியின் உலகளாவிய தேவை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே போகிறது. எந்தவொரு தடுப்பூசியும் அல்லது நிறுவனமும் மட்டுமே, உலகளாவிய தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்று சனோஃபி பாஸ்டரின் நிர்வாக துணைத் தலைவர் தாமஸ் ட்ரையம்பே கூறியுள்ளார். இருப்பினும், தடுப்பூசிகள் மட்டுமே முழுமையான தீர்வாக இருக்காது என்று, உலக சுகாதார நிறுவனமும் அறிவித்திருந்தது.
இருப்பினும் தடுப்பூசிக்கான பணிகள் வேகமாகவும் விரைவாகவும் செய்யப்படு வருகிறது. உலகளைவில் 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தடுப்பூசி கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவிலும் கொரோனாவுக்கான பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்போதைக்கு, இரண்டு தடுப்பூசிகள் மனித சோதனைகளுக்குள் இறங்கியுள்ளது
இதற்கிடையில், உலக சுகாதார நிறுவனம் சார்பில், ``தடுப்பூசியில் தேசியவாதத்தை பின்பற்றுவது கொரோனா தொற்றை அதிகரிக்க வழிவகுக்குமே தவிர குறைக்காது" என்று தெரிவிக்கப்பட்டது.
இதில் தடுப்பூசி தேசியவாதம் என்றால் என்ன என்பது பற்றி நாம் யோசிக்கலாம். அடிப்படையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பிற்கு இன்னும் காலம் ஆகும். ஆனால் தடுப்பூசிகள் விநியோகத்திற்கு, இப்பொழுதே முன்கூட்டியே நாடுகள் அனைத்தும் முன்பதிவு செய்ய துவங்குகின்றன. சில நாடுகள் பில்லியன் டாலர்களுக்கு மேல், தடுப்பூசியின் முடிவு தெரியாமலேயே, முதலீடு செய்துள்ளனர். இது தடுப்பூசியின் விலை மற்றும் அணுகலுக்கான கேள்விகளை உருவாக்குகிறது. பொருளாதார ரீதியலான இந்த அனுகுமுறை, தடுப்பூசி தேசியவாதம் எனப்படுகிறது. இந்த மாதிரியான அனுகுமுறைகள், கண்டறியப்படும் தடுப்பூசியை மக்களை போய் சேர்வதை கேள்விக்குறியாக்கும்.
இதன்மூலம் அவர், ``தடுப்பூசியில் தேசியவாதத்தை பின்பற்றுவது கொரோனா தொற்றை அதிகரிக்க வழிவகுக்குமே தவிர குறைக்காது" என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.
ரஷ்யா தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாக கூறிவிட்ட போதும், அது பாதுகாப்பானதாக அறியப்படாமல் இருக்கிறது. ரஷ்யா தன்னுடைய இரண்டாவது தடுப்பூசியையும் கண்டறிந்துவிட்டதாக கூறி, விரைவில் அதையும் அறிவிக்க போவதாக சொல்லி வருகின்றது. இவையாவும் ஒருபுறமிருக்க, உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி தடுப்பூசி ஆய்வில் முன்னனியில் இருப்பதாக சொல்லப்படும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ரா ஜெனெகா கண்டுபிடித்துள்ள தடுப்பூசியான கோவிஷீல்ட் தடுப்பூசிக்கான ஆய்வு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனைகள், இந்தியாவின் சீரம் நிறுவனத்தால் கையாளப்படுகின்றன.
இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் நடைபெற்றக் கூட்டத்தில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால திட்டத்தின் நிர்வாக இயக்குனர் மைக் ரியான், ``கொரோனா தடுப்பூசியைப் பெறுவதற்கான சாதகமான சூழலை பார்க்கும்போது தடுப்பூசி தயாராவதற்கு முன்பே 20 லட்சம் மக்கள் கொரோனாவால் பலியாகக்கூடிய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் உலகத் தலைவர்கள் உயிர்காக்கும் நடவடிக்கையில் சிறப்பாக செயல்படுவதின் மூலம் மட்டுமே இந்த நெருக்கடியில் இருந்து மீள முடியும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.