`கொரோனா பரவலை அதிகப்படுத்துவது, இளைஞர்கள்தான்!' - WHO வருத்தம்
By Nivetha | Galatta | Jul 31, 2020, 06:01 pm
கொரோனா பாதிப்பு தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதேனாம் மற்றும் பிற நிர்வாகிகள், தினமும் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசுவது வழக்கம். அப்படி நான்கு தினங்களுக்கு முன்பு (ஜூலை 27) பேசும்போது, ``பொதுசுகாதார அவசரநிலை பிரகடனம் கடந்த ஜனவரி 30-ம் தேதி அறிவிக்கப்பட்டபோது சீனாவைத் தவிர்த்த வெளியே உள்ள நாடுகளில் 100-க்கும் குறைவான பாதிப்புகளே இருந்தன. வைரஸ் தொடர்பான இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. ஆனால், தற்போது உலகளவில் தற்போது கிட்டத்தட்ட 16 மில்லியன் நபர்கள் வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். வைரஸால் பாதிப்படைந்தவர்களில் சுமார் 6.4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். கடந்த ஆறு வாரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது” என்று கூறியிருந்தார். அதிகம் பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன.
மேலும் பேசியவர், ``கொரோனா வைரஸ் உலகத்தையே மாற்றிவிட்டது. சொல்லப்போனால், உலக நாடுகளையும் மக்களையும் கொரோனா ஒன்றிணைத்துவிட்டது. கொரோனா தொடர்பான விஷயங்களில் மற்ற நாடுகளுக்கு ஆதரவளிக்க உலக சுகாதார நிறுவனமும் கடந்த ஆறு மாதங்களாக அயராது உழைத்து வருகிறது. இதற்காக உழைத்தவர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். ஆனாலும் இன்னும் நாம் அனைவரும் செல்ல வேண்டிய தூரம் சற்றே நீண்டது. கடினமானதும்கூட.
இதுவரை உலக சுகாதார நிறுவனம் அறிவித்த உலகளாவிய பெருந்தொற்று நோய் மற்றும் மருத்துவ அவசர நிலையில், மிக மோசமானது இந்த கோவிட் 19 கொரோனா தொற்றுதான்” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், நேற்றைய தினம் உலகம் முழுவதும் கொரோனா பரவல் எண்ணிக்கை 1.7 கோடியை கடந்துள்ளது. உயிரிழப்புகளும் 6 லட்சத்தைக் கடந்துவிட்டன. அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடிக்கு மேல் உள்ளது. இருந்தாலும் இந்தக் கொடிய வைரஸின் ஆபத்தைக் குறைப்பது நம் தனி மனிதரின் பொறுப்பு என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று ஜெனீவானில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் டெட்ரோஸ், ``உலகளவில் கிட்டத்தட்ட 10 மில்லியன் கொரோனா வழக்குகள் 10 நாடுகளில் பதிவாகியுள்ளன. அதில் பாதி வழக்குகள் மூன்று நாடுகளில் மட்டுமே உள்ளன. வயதானவர்களுக்குக் கடுமையான நோய் வருவதற்கான அதிக ஆபத்து இருந்தாலும் அதே அளவிலான ஆபத்து இளைஞர்களுக்கும் உள்ளது.
கொரோனா ஆபத்து குறித்து இளைஞர்களை நம்பவைப்பது நாங்கள் எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்றாக உள்ளது. இளைஞர்கள் தங்கள் பாதுகாப்பைக் கைவிடும் இடங்களிலெல்லாம், கொரோனா பரவல் அதிகரிப்பதை காண முடிகிறது. இதற்கான சான்று எங்களிடம் உள்ளது. நாங்கள் முன்பே சொல்லியிருக்கிறோம் இருந்தும் மீண்டும் சொல்கிறோம், இளைஞர்கள் வெல்ல முடியாதவர்கள் இல்லை. அவர்களுக்கும் தொற்று ஏற்படலாம் அதனால் உயிரிழக்கலாம்.
இளைஞர்கள்தான் போதியளவு விழிப்புஉணர்வின்றி வைரஸ் பரவலை அதிகரிக்கவைக்கின்றனர். எனவே, இளைஞர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முயலவேண்டும். மற்றவர்களைப் போல முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு அடுத்தபடியாக, தலைவர்கள் தங்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும். யாராக இருந்தாலும் முன்னெச்சரிக்கை அவசியம் என்ற போதிலும் தலைவர்களை குறிப்பிட்ட சொல்லக்காரணம், தலைவர்கள்தான் மாற்றத்தின் இயக்கமாக இருக்க வேண்டும். கோவிட்-19 வெளிப்படுத்தும் அபாயத்தைக் குறைப்பதில் நம் அனைவருக்கும் ஒரு பங்கு உள்ளது என்பதை ஒவ்வொரு தனி மனிதரும் நினைவில் கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
இளைஞர்களின் மீது வைக்கப்பட்ட இந்த விமர்சனம், உலகளாவிய கொரோனா பரவல் விஷயத்தில் மிகமுக்கியமான செயல்பாடாக பார்க்கப்படுகிறது.