கஜகஜஸ்தானில் பரவும் புதுவைரஸ்!- உண்மையா பொய்யா?
By Nivetha | Galatta | Jul 10, 2020, 06:20 pm
உலகமே கொரோனாவால் துயருண்டு கிடக்கும் இந்த சூழலில், சீனாவில் அடுத்தடுத்து கிளம்பிக்கொண்டிருக்கும் புதுப்புது வைரஸ் வகைகள், மக்களை பீதியடைய வைத்துக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில் சில தினங்களுக்கு முன் சமீபத்தில் பூபானிக் பிளேக் என்றொரு கொடிய நோய் பல ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் பரவுவதாக சொல்லப்பட்டது.
கோவிட் - 19 கொரோனா, பிற இடங்களை விட தெற்கு ஆசியாவில் வேகமாக பரவி வருவதாக பலரும் குறிப்பிட்டு வந்தனர்.
இதற்கிடையில் இன்றைய தினம், ஆசியாவின் மையப் பகுதியான கசாக்ஸ்தான் என்ற இடத்திலிருந்து மற்றொரு பெயர் தெரியதாத புது வைரஸ் உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பேசும் சீன தூதரகம் இன்று பேசியுள்ளது. தனது அறிக்கையில், கஜகஸ்தான் பகுதியில் கோவிட் - 19 போன்ற, நிமோனியா பிரச்னையை ஏற்படுத்தும் வைரஸொன்று பரவுகின்றது என்றும், சென்ற மாதம் (ஜூன் 2020) அவ்வைரஸூக்கு 600 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், இன்று உலகையே தலைகீழாக போட்டிருக்கும் சூழலில், புதியதொரு வைரஸா என மக்கள் அச்சத்தில் உள்ளனர். கஜகஸ்தானில் பரவிவருவதாக சொல்லப்படும் அந்த புதிய வைரஸ், கடந்த 6 மாதமாக அங்கு இருப்பதாகவும், அங்கு இதுவரை 1,700 சொச்சம் பேர் மரணம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கஜகஸ்தானின் கசக் என்ற இடத்தில் இந்த வைரஸ் பரவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கஜகஸ்தானிலுள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வமான செய்திக்குறிப்பில், `கஜகஸ்தானில் பரவிவரும் மர்ம காய்ச்சல் எந்தவகையானது என தெரியவில்லை, அது நிமோனியா என்று மட்டுமே இப்போதைக்கு கண்டறியப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகிறோம். மேலும் கஜகஸ்தானில் உள்ள சீன நாட்டினருக்கு நிலைமையை தெரியப்படுத்த இந்த எச்சரிக்கை விடப்படுகின்றது. தொற்று அபாயங்களைக் குறைக்க தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அந்த அரசு தெரிவித்துள்ளது. இத்தனை மாதங்களாக பரவிவரும் இந்த அறியப்படாத மர்மக் காய்ச்சல் தொடர்பாக உலக சுகாதார அமைப்புக்கு அறிவிக்கப்பட்டதா என்று எங்களுக்குத் தெரியவில்லை. சீன அரசு ஊடகங்களில் வெளியான செய்திகளிலின் படி, கஜகஸ்தானில் கடந்த புதன்கிழமை மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையானது, கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகம். ஆகவே மக்கள் விழிப்பு உணர்வோடு இருக்கவும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன தூதரகத்தின் இந்த அறிவிப்பை, கஜகஸ்தான் சுகாதார அமைச்சகம் "போலி செய்தி" என்று கூறியுள்ளது. ``பாக்டீரியா, மற்றும் வைரஸ் நிமோனியா நோய்த்தொற்றுகளின் தெளிவற்ற காரணங்கள் அனைத்தும் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி இருப்பதாகவும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. தூதரகம் குறிப்பிடும் சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் தவறானவை. இறந்தவர்கள், என்ன காரணத்தினால் இறந்தார்கள் என்பது, எங்களுக்கு இன்னும் உறுதிபட தெரியவில்லை. அவர்களின் இறப்புக்கு, கொரோனா கூட காரணமாக இருக்கலாம். எதுவாகினும், ஆய்வு முடிந்ததும், நாங்கள் அறிவிப்போம். போலி செய்திகளை நம்ப வேண்டாம்" என்று அந்நாட்டு அமைச்சகம் உறுதியாக கூறியுள்ளது.
கொரோனா பரவுதலின் தொடக்க காலத்தில், அந்த வைரஸ் பற்றி உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரிகள் கவனிக்காமல் விட்டதே, இன்று உலகமே அதற்கு முடங்கி போயிருக்க காரணம் என சொல்கிறார்கள் விஞ்ஞானிகள். அப்படியிருக்கும் போது, மீண்டுமொரு வைரஸ், அதுவும் உயிரைக் குடிக்கும் வைரஸ் வேறொரு வடிவில் பரவுகிறது எனும்போது, இந்த நேரத்திலாவது உலக சுகாதார நிறுவனம் வேகமாக பிரச்னையில் தலையிட வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
உலக சுகாதார நிறுவனம், பிரச்னையை கையில் எடுத்து, விரைந்து நடவடிக்கை எடுக்குமா என்பதை, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- ஜெ.நிவேதா