மோடி தலைமையில் தொடங்கும் மத்திய அமைச்சரவை கூட்டம்!
By Nivetha | Galatta | Oct 21, 2020, 01:29 pm
பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை 6 மணிக்கு, நாட்டு மக்களுக்கு உரையாற்றி இருந்தார். அப்போது அவர் கூறும்பொழுது, கொரோனா கால தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசியிருந்தார். குறிப்பாக, பண்டிகை காலங்களில் சந்தைகள் மீண்டும் செயல்பட தொடங்குகின்றன என்பதால், தற்போது என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பேசியிருந்தார் அவர்.
தனது உரையில், ``ஊரடங்கு விரைவில் முடிந்து விடலாம். ஆனால், கொரோனா வைரஸானது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது நாம் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம். ஒவ்வொரு இந்தியரின் முயற்சியால் கடந்த 7 முதல் 8 மாதங்களில் இந்தியா ஒரு நிலையான சூழ்நிலையில் உள்ளது. அது வீழ்ந்து போக நாம் விட்டு விட கூடாது" என கூறியுள்ளார்.
மேலும் பேசியவர், ``நாட்டில் குணமடைந்தோர் விகிதம் நல்ல முறையில் உள்ளது. உயிரிழப்பு விகிதம் மிக குறைவு. இந்தியாவில் 10 லட்சம் மக்கள் தொகையில் 5,500 பேருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இந்த எண்ணிக்கை 25 ஆயிரம் ஆக உள்ளது.
இதேபோன்று உயிரிழப்பு விகிதம் என எடுத்து கொண்டால் இந்தியாவில் 10 லட்சம் மக்கள் தொகையில் 83 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுவே அமெரிக்கா, பிரேசில், ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இந்த எண்ணிக்கை 600க்கும் கூடுதலாக உள்ளது" என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்கு அடுத்து உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக விளங்கும் இந்தியா நாள்தோறும் தனது நோய்த்தொற்று பரிசோதனைகளை அதிகரிக்கும் முயற்சியில் உள்ளது. எனினும், தற்போது நடைமுறையிலுள்ள சில வகை பரிசோதனைகளில் நம்பகத்தன்மை சார்ந்த சிக்கல்கள் உள்ளன.
கொரோனாவுக்கான பரிசோதனைகளில், சமீபத்தில் நடைமுறைக்கு வந்த கொரோனா பரிசோதனைக்கு ஃபெலுடா என்று பெயர். இந்தியாவின் பிரபல துப்பறியும் கதாபாத்திரத்தை முதலாக கொண்டு இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. கர்ப்பகால பரிசோதனைகளை போன்று இந்த சோதனை முறையின் மூலம் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும். இது க்ரிஸ்ப்ர் (Crispr - Clustered Regularly Interspaced Short Palindromic Repeats) எனப்படும் ஒருவித மரபணு திருத்த தொழில்நுட்பத்தை கொண்டு செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.
மரபணு திருத்த செயல்பாடானது அந்த சொல்லுக்கு ஏற்றவாறே அமைந்துள்ளது. இதன்படி, மரபணு குறியீட்டில் நுண்ணிய மாற்றங்களைச் செய்ய மரபணு ஸ்கேன் செய்யப்படுகிறது. அரிவாள்செல் சோகை உள்ளிட்ட உடல்நலப் பிரச்சனைகளுக்கு மருத்துவம் அளிக்க இந்த முறை ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த புதிய நோய்த்தொற்று பரிசோதனை முறை இன்னும் சில வாரங்களில் நாடுமுழுவதும் அமலுக்கு வருமென்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுபவர்களிடம் இருந்து பெறப்படும் மாதிரியில் உள்ள மரபியல் பொருட்களை பிரித்தெடுக்கும் பி.சி.ஆர் எனும் பரிசோதனையே உலகம் முழுவதும் கொரோனாவை கண்டறியும் பிரதான சோதனை முறையாக இருக்கிறது.
மரபணு பொருட்களிலிருந்து புரதங்கள் மற்றும் கொழுப்புகளை அகற்ற இரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டு, இயந்திர பகுப்பாய்வு மூலம் மாதிரி சோதிக்கப்படுகிறது. ஆனால், அவை மிகவும் விலை உயர்ந்தவையாக மட்டுமின்றி சோதனை முடிவுகளை பெறுவதற்கு எட்டு மணிநேரம் வரை எடுக்கும் வழிமுறையாகவும் உள்ளது. நோய்த்தொற்று பரிசோதனை மாதிரிகளை ஆய்வகங்களுக்கு எடுத்துச் செல்லும் போக்குவரத்து நேரத்தை பொறுத்து இது சில நாட்களாகவும் அதிகரிக்கலாம்.
இதற்கிடையில் இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் முக்கிய விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.