கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்துகள் வழங்க பரிந்துரை செய்யும் அமைச்சர் விஜயபாஸ்கர்!
By Nivetha | Galatta | Jul 31, 2020, 05:09 pm
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே போகும் இந்த நேரத்தில், கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருந்துகளை வழங்க மருத்துவர்கள் பரிந்துரை செய்திருப்பதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில் கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகளும் பயன்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கொரோனாவுக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கும் ஆயுர்வேத மருந்துகள், அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது, கொரோனா நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருந்துகளான இந்துகாந்த கசாயம், கடுக்காய் உள்ளிட்ட மருத்துவப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் அகஸ்திய ரசாயனம், கூஷ்மாண்ட ரசாயனம் வழங்க ஆயுர்வேத மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இந்துகாந்தகஷாயம் திருவில்லியம், திப்பிலி வேர், தலமூலம் உள்ளிட்ட 17 மூலிகைகளால் தயாரிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள் காலை மற்றும் இரவு என இருவேளை இந்த மருந்துகளை சாப்பிட மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் மருத்தவரின் ஆலோசனைப்படி மருந்துகளை அருந்த வேண்டும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்
தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சித்த மருத்துவமான கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமே முக்கிய காரணியாக விளங்குவதால் ஆயுர்வேத மருந்துகளையும் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தன.
இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் வழங்க மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளது, வரவேற்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் நேற்று 61,202 மாதிரிகள் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதுநாள் வரை 25,97,862 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் நேற்று மட்டும் 59437 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டிருந்தது.
தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,39,978 ஆக அதிகரித்துள்ளது.
இதில் சென்னையில் மட்டும் 1,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 98,767 ஆக அதிகரித்துள்ளது. இன்று தொற்று உறுதியானவர்களில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களில் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக, நோயாளிகள் எண்ணிக்கை உயர்வு சற்றே நிதானமாக ஒரே நிலையில் இருந்தது. நேற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. இதற்கு காரணமாக , வேகமாக செய்யப்பட்ட கொரோனா சோதனைகள் சொல்லப்படுகிறது. தினமும் 62 ஆயிரத்திற்கும் அதிகமான சோதனைகள் தமிழகத்தில் செய்யப்படுவதால், வேகமாக கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உடனுக்குடன் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். லேசான அறிகுறி இருக்கும் நபர்களுக்கு கூட கொரோனா சோதனை செய்யப்பட்டு, அவர்களுக்கு முடிவு அறிவிக்கப்படுகிறது.
இதனால் வேகமாக அதிகரித்த கேஸ்கள் தற்போது கொஞ்சம் குறைய தொடங்கி உள்ளது. மொத்தமாக நோயாளி எண்ணிக்கை குறையவில்லை என்றாலும் கூட கொஞ்சம் கொஞ்சமாக கேஸ்கள் சரிய தொடங்கி உள்ளது. தற்போது லாக்டவுனும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் லாக்டவுன் முடியும் போது, கேஸ்களும் மொத்தமாக குறையும் என்று கூறுகிறார்கள். ஆகஸ்ட் இறுதியில் மொத்தமாக கேஸ்கள் குறைய வாய்ப்புள்ளது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது கொரோனா மரணங்கள் மட்டுமே அதிகரிக்க தொடங்கி உள்ளது. கேஸ்கள் சரிய சரிய தானாக பலி எண்ணிக்கையும் வேகமாக குறையும் என்று எதிர்ப்பாக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.