`கொரோனா பரவலில் உலக நாடுகளுக்கு முன்மாதிரி, இந்தியாவும் அமெரிக்காவும்தான்!' - வெள்ளை மாளிகை
By Nivetha | Galatta | Jul 17, 2020, 03:34 pm
கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில், ஒவ்வொரு நாளும் இந்தியா கூடுதல் மும்மரம் காட்டி வருகின்றதென்றே சொல்ல வேண்டும். சூழலும், ஒவ்வொரு நாளும் இந்தியாவில் மோசமாகிக் கொண்டே போவது, இதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது.
நேற்றைய கணக்குப்படி, இதுவரை இந்தியாவில் ஒரு மில்லியன் பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சரிபாதி பேர் குணமாகி இருப்பினும்கூட, உயிரிழப்பும் 25,000 என்ற எண்ணிக்கையைக் கடந்திருக்கிறது. இதற்கிடையில் எதிர்க்கட்சிகள் சார்பில் மத்திய, மாநில அரசின் மீது கொரோனா பரவலை சரியாகக் கையாளவில்லை என கடும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.
இன்றைய தினம்கூட, ராகுல் காந்தி மத்திய அரசின் தடுமாறிய நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்து, இதே நிலை நீடித்தால், மிக விரைவாக இரண்டு மில்லியன் என்ற எண்ணிக்கையில் நோயாளிகள் உருவாகி, உயிரிழப்பு அதிகரிக்கும் எனக் கூறி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
கொரோனா பரவலின் முக்கியமான ஒரு அங்கமாக, கொரோனாவுக்கான பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று வல்லுநர்கள் தரப்பில் சொல்லப்பட்டு வருகின்றது. பரிசோதனை அதிகப்படுத்தப்படும்போது, நோயாளிகள் அதிகம் தெரியவருவர் எனும்போதும், அதைப் பின்னடைவாக நினைக்காமல் மருத்துவத்துறையை விரிவுபடுத்தி, அதிகம் பேரைக் குணப்படுத்திக் காட்ட வேண்டும் எனச் சொல்கின்றனர் வல்லுநர்கள்.
இந்தியா இப்போது வரை, அதிக பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன என்று மத்திய அரசில் சொல்லப்பட்டு வருகின்றது.
கொரோனாவை கட்டுப்படுத்தலில் உலக நாடுகளை விட இந்தியா சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நேற்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து நேற்று பேசியபோது, ``நாட்டில் அடுத்த 3 மாதங்களில் தினமும் 10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது தினமும் 3.25 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாகத்தான், புதிதாக அதிக கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பவர்கள் விகிதம் இன்றைய தேதிக்கு 2.57% என்றும், கொரோனாவிலிருந்து மீள்பவர்கள் சதவீதம் 63.25 என்றும் உள்ளது. ஒவ்வொரு நாளும் நாம் மேம்பட்டு கொண்டு வருகிறோம். அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாடு, கொரோனாவை கட்டுப்படுத்தலில் உலக நாடுகளை விட சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம்" என்று சொல்லியிருந்தார்.
இந்தியாவில், இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 32,695 பேருக்கு கொரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது. பரிசோதனை அதிகரிப்பே, அதிக நோயாளிகள் உறுதிசெய்யப்பட்டதற்கான காரணமாகத் தெரிகிறது.
இந்தியாவின் சிறப்பான செயல்திட்டத்தை உலகுக்கு உணர்த்தும் விதத்தில், உலக அளவில் கொரோனா பரிசோதனையில் அமெரிக்காவிற்கு அடுத்த அதிக பரிசோதனை மேற்கொண்ட நாடாக இந்தியா உள்ளது என வெள்ளை மாளிகை இன்று தெரிவித்துள்ளது.
இன்றைய தேதிக்கு கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு, அமெரிக்காதான். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெய்லீ மெக்னானி, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் 4.2 கோடிக்கும் அதிகமாகச் செய்துள்ளதாகக் கூறியிருந்தார்.
மேலும் பேசுகையில், ``இரண்டாவது மிக அதிக சோதனை செய்த நாடாக இந்தியா உள்ளது. அங்கு 1.2 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரிசோதனையில் நாங்கள் (அமெரிக்கா, இந்தியா) உலகை வழிநடத்துகிறோம்" எனச் சொல்லியிருந்தார்.
அமெரிக்காவில் 36 லட்சத்து 95 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அங்கு 1.41 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த இடங்களில் பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் மக்களிடையே அச்சம் நிலவினாலும், பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பதால் தான் பாதிப்பு எண்ணிக்கை கூடுவதாக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கூறுகின்றன.
பிற நாடுகளிலெல்லாம் குறைவாகப் பரிசோதனைகள் செய்யப்படுவதாகவும், அதனால்தான் அங்கெல்லாம் நோயாளிகள் குறைவாக இருக்கின்றனர் என்றும், அப்படியொரு பெயர் அமெரிக்காவுக்கு வேண்டும் என்றெல்லாம் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இவ்வளவு மோசமான பாதிப்பு இருந்தபோதிலும், அமெரிக்கா சிறப்பான செயல்பாட்டை மேற்கொள்வதாகக் கூறிய ட்ரம்ப்பின் பேச்சுகள் விமர்சனமாகப் பார்க்கப்பட்ட நிலையில் இப்போது ட்ரம்ப் அரசாங்கத்தின் இந்தியா மீதான இந்த பாராட்டும், பல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
- ஜெ.நிவேதா.