இந்தியாவில் வெறும் 8 சதவிகிதம் பேரால், 60 சதவிகிதம் பேருக்கு பரவியதா கொரோனா? ஆய்வில் தகவல்!
By Nivetha | Galatta | Oct 02, 2020, 03:37 pm
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5,688 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,03,290 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 66 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9,586 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,516 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 5,47,335 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 46,369 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இதுவரை தொற்று உறுதியான 6,03,290 பேரில், 3,64,129 பேர் ஆண்கள், 2,39,130 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 31 பேர் ஆகும். தமிழகம் முழுவதும் இதுவரை 74,41,697 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 87,647 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் 1289 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,68,689 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9,586 ஆக அதிகரித்துள்ளது. தமிழக்ததில் இன்று மட்டும் இதுவரை 87,647 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 74.41 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று தொடர்பாக 5 லட்சம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் சயின்ஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளான 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் மூலம் யாருக்கும் தொற்று பரவவில்லை என்றும், பாதிக்கப்பட்ட 8 விழுக்காட்டினர் மூலம் மட்டுமே 60 சதவிகிதம் பேருக்கு கொரோனா பரவியதாகவும் கூறப்பட்டுள்ளது.
பெரியவர்களை விட 14 வயதுக்குட்பட்டவர்கள்தான் அதிகளவில் சம வயதுள்ளவர்களுக்கு தொற்றை பரப்புவதாகவும் கொரோனாவால் இறந்தவர்களில் 45 சதவிகிதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகம், ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பேருந்து, ரயில் பயணங்கள் கொரோனா பரவ அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களிலும் தொற்றால் இறப்பவர்கள் சராசரியாக 5 நாட்கள் வரை மருத்துவமனையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதேபோல மற்றொரு தரப்பு ஆய்வாளர்கள், கொரோனா பரவல் பற்றிய புதிய கோணத்தில் தமிழகம் மற்றும் ஆந்திரா அரசுகள் இணைந்து மிகப்பெரிய ஆய்வை நடத்தி அறிக்கை தயாரித்துள்ளன. இந்த ஆய்வில் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான டாக்டர் பி.சந்திரமோகன், டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், டாக்டர் கே.கோபால் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆய்வுக் கட்டுரை, அமெரிக்காவின் அறிவியல் முன்னேற்ற சங்கத்தின் (ஏ.ஏ.ஏ.எஸ்.) சார்பில் நடத்தப்படும் ‘சயின்ஸ்’ என்ற உலகம் முழுவதும் செல்லக்கூடிய இதழில் வெளியாகி இருக்கிறது. இதுபோன்ற இதழில் மிகச் சிறந்த ஆய்வுகளே வெளியிடப்படுகின்றன.
அந்த ஆய்வறிக்கையின் விவரத்தின்படி,
``கொரோனா தொற்று மற்றும் அதனால் ஏற்படும் இறப்பு, இந்தியாவில் 40 முதல் 69 வயதுடையவர்களுக்கே அதிகம் நேர்கிறது. ஒருவரால் பலருக்கு தொற்று பரவக்கூடிய ‘சூப்பர் ஸ்பிரட்’ என்ற வகையில்தான், இங்கு அதிகமானவர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஒரே வயதுடையவர்களால் தொற்று பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. அதிலும், பிறந்த குழந்தை முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தொற்று பரவும் நிலை வலுவாக இருக்கிறது.
தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் மரணமடைவோரின் எண்ணிக்கை, 5 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களில் 0.05 சதவீதமாகவும், 85 வயதுக்கு மேற்பட்டவர்களில் 16.6 சதவீதமாகவும் உள்ளது. தமிழகம் மற்றும் ஆந்திராவில், தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்ந்த பிறகு ஏற்படும் மரணம், சராசரி 6 நாட்களுக்குப் பிறகு நேர்கிறது. இது அமெரிக்காவில் 13 நாட்களாக உள்ளது.
தொற்றுக்கு ஆளானவர்களில் 70 சதவீதம் பேர், அவர்களின் தொடர்பில் உள்ளவர்களுக்கு தொற்றை ஏற்படுத்தவில்லை. ஆனால் தொற்று உறுதி செய்யப்பட்ட 8 சதவீதம் பேர் 60 சதவீதம் தொற்றை பரப்புகின்றனர்.
இந்திய மாநிலங்களில் தமிழகம் மற்றும் ஆந்திர பிரதேசம்தான் அதிகபட்ச சுகாதார பணியாளர்களை கொண்ட, பொது சுகாதாரத்தில் அதிக செலவுகளை மேற்கொள்ளும் மாநிலங்களாக உள்ளன.
கொரோனாவினால் இறந்தவர்களில் 63 சதவீதம் பேர், குறைந்தபட்சம் வேறு ஏதாவது ஒரு நோயால் பீடிக்கப்பட்டவராக இருந்துள்ளனர். 36 சதவீதம் பேர், இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட நோய்களுக்கு ஆட்பட்டு, அதனால் கொரோனா எளிதாக அவர்களை தாக்கும் சூழ்நிலை இருந்துள்ளது.
கொரோனாவினால் இறந்தவர்களில் 45 சதவீதம் பேர் சர்க்கரை நோயாளிகள். உயர்ந்த வருவாய் கொண்ட நாடுகளை போல அல்லாமல், இந்தியாவில் கொரோனா மரணங்கள் 50 முதல் 64 வயதுக்கு இடைப்பட்டவர்களிடம்தான் அதிகம் நேரிட்டுள்ளது.
ஒருவருக்கு ஒருவர் 3 அடி இடைவெளி விடாமல் செயல்படுபவர்களும், முக கவசம் அணியாமலும் இருப்போர்தான் தொற்றுக்கு அதிகம் ஆளாகின்றனர். மூடப்பட்ட நிலையிலான போக்குவரத்தில் 6 மணிநேரத்துக்கும் மேலாக இருப்பவர்களுக்கு தொற்று ஏற்பட 79 சதவீதம் வாய்ப்பு உள்ளது.
இந்த ஆய்வுகள், கொரோனா பற்றிய புதிய தகவல்களை தந்திருப்பதோடு, அதன் தடுப்பு நடவடிக்கைகளுக்கு புதிய வழிகளையும் காட்டியுள்ளன"
என்று கூறப்பட்டுள்ளது.