தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 2.34 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 58,818 நபர்களில் 6,426 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 7வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் அதிகமாக தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு 2,34,114 ஆக அதிகரித்துள்ளது.
வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,371 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 805 பேர், உள்நாட்டு விமானங்களில் இருந்து வந்த 549 பேர், ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 4017 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ரயில், விமானம், பேருந்து மற்றும் இதர வாகனங்களில் தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 4,55,638 -ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் தமிழகத்தில் 5,927 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 1,72,883 என்று அதிகரித்துள்ளது. இன்று 82 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பு 3,741 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 57,490 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையை பொறுத்த அளவில் 26வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 6,426 பேரில் 1,117 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 97,575 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,076 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தின் கொரோனா நிலவரம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், ``கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய பொருள்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா முகக்கவசம், மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் முதற்கட்டமாக வழங்கப்பட்டிருக்கிறது” என்றார்.
தொடர்ந்து பேசியவர், ``தமிழக அரசு மேற்கொள்ளும் தொடர்ச்சியான நடவடிக்கை காரணத்தால் கொரோனா இறப்பு சதவிகிதம் குறைந்திருக்கிறது. சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதனால் தலைநகரில் கொரோனா பாதிப்பு குறைந்திருக்கிறது. சென்னையில் மட்டும் 70 நடமாடும் மருத்துவமனையின் மூலம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
காய்ச்சல் முகாம்களால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலே அதிக பரிசோதனைகள் தமிழகத்தில்தான் செய்யப்படுகின்றன. அரசு சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றினால் இயல்பு நிலைக்கு நிச்சயம் திரும்ப முடியும். அதனால் அதைப் பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” எனக்கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.31 லட்சமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலையில் தெரிவித்திருந்தது. அதில் 9.08 லட்சம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 5,09,447 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில், மராட்டிய மாநிலத்தில் மட்டும் புதிதாக 7,924 பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல தமிழகத்தில் 6,993, ஆந்திராவில் 6,051, கர்நாடகாவில் 5,324, உத்தரபிரதேசத்தில் 3,505, தெலுங்கானாவில் 3,083, மேற்குவங்காளத்தில் 2,112, பீகாரில் 2,068, ஒடிசாவில் 1,503, அசாமில் 1,348, குஜராத்தில் 1,052, ராஜஸ்தானில் 969, அரியானாவில் 795, மத்தியபிரதேசத்தில் 789, கேரளாவில் 702, டெல்லியில் 613, பஞ்சாபில் 551, ஜம்மு காஷ்மீரில் 470, ஜார்கண்டில் 408, சத்தீஸ்காரில் 295, கோவாவில் 258, உத்தரகாண்டில் 224, திரிபுராவில் 149, இமாசலபிரதேசத்தில் 94, புதுச்சேரியில் 86, அருணாசலபிரதேசத்தில் 81, மணிப்பூரில் 51, நாகாலாந்தில் 46, மேகாலயாவில் 36, தாதர்நகர் ஹவேலியில் 32, சண்டிகாரில் 23, மிசோரத்தில் 23, லடாக்கில் 21, அந்தமான் நிகோபார் தீவில் 14, சிக்கிமில் 10 என ஒரே நாளில் மொத்தம் 47 ஆயிரத்து 703 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என கூறப்பட்டிருந்தது
- ஜெ.நிவேதா