தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வாரிசு, ஜெய்லர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் யோகிபாபு, முன்னதாக நடித்துள்ள அயலான், காஃபி வித் காதல், தலைநகரம் 2, அந்தகன், ஓ மை கோஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன.
அதே போல் ஹீரோவாகவும் முன்னணி கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் யோகி பாபு நடிப்பில் பூச்சாண்டி, சலூன், காசேதான் கடவுளடா, மெடிக்கல் மிராக்கிள், பூமர் அங்கிள்,பொம்மை நாயகி மற்றும் யானை முகத்தான் ஆகிய திரைப்படங்கள் வரிசையில் உள்ளன. இதனிடையே தான் ஹீரோவாக நடிக்கும் அடுத்த புதிய திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி எழுத்தாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் யோகிபாபு.
கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற வில் அம்பு படத்தின் இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கத்தில் கலகலப்பான நகைச்சுவை திரைப்படமாக தயாராக இருக்கும் இப்படத்தில் யோகி பாபுவுடன் இணைந்து வில் அம்பு படத்தில் நடித்த சமஸ்கிருதி கதாநாயகியாக நடிக்க, K.S.ரவிக்குமார், மனோபாலா, சிங்கமுத்து, மொட்டை ராஜேந்திரன் மற்றும் மயில்சாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
லெமன் லீஃப் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் R.கணேஷ் மூர்த்தி தனது தயாரிப்பில் 3வது படமாக தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. யோகிபாபு கதை, திரைக்கதை, வசனம், எழுதி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பூஜை புகைப்படங்கள் இதோ...
— Yogi Babu (@iYogiBabu) October 3, 2022