சினிமா...இந்த மூன்றெழுத்து மந்திரம் பலரது வாழ்வை புரட்டி போட்டுள்ளது. உழைப்பவர்கள் உயருவார்கள் என்பதற்கு சிறந்த தளம் இந்த சினிமா. முயற்சி, வெற்றி, தோல்வி, அழுகை, ஏமாற்றம், கண்ணீர், காதல், போராட்டம், அடிதடி என சினிமாவுக்கும் ஏகப்பட்ட எமோஷன்ஸ் உண்டு. அப்படிப்பட்ட சினிமாவில் நுழைந்து, தனக்கென ஒரு பாதையை உருவாக்கி...அதை நனவாக்கி... மக்கள் செல்வன் எனும் அந்தஸ்த்தில் இருப்பவர் தான் விஜய் சேதுபதி.
எதார்த்தமா சொல்லணும்னா...இதான் நம்ம சேது !!! விஜய குருநாத சேதுபதி-யா ஆரம்பிச்சு இன்னைக்கு திரை ரசிகர்களோடு அதிபதி-யா இருந்துட்டு இருக்காரு.
விஜய் சேதுபதியின் இந்த வளர்ச்சி ஒரே நைட்டில், ஒரே பாட்டில் வந்தது இல்லை. படங்களில் சின்ன சின்ன கேரக்டர், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டா அப்போ அப்போ ஃபிரேம்-ல வருவாரு. 2010- ம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று எனும் திரைப்படம் அவரை நாயகனாக அறிமுகப்படுத்தியது. ஹீரோவா இல்லாம, நம்மல்ல ஒருத்தரா தெரிஞ்சாரு...அங்க நிக்குறாரு !!!
இந்தப் படத்தைத் தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சுந்தர பாண்டியன், சூது கவ்வும், நானும் ரவுடிதான், சேதுபதி, விக்ரம் வேதா-னு தொட்டதெல்லாம் தூள் தான். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவா மாறியிருக்கிறார். அலட்டல் இல்லாத அவருடைய தமிழ் மொழி தாண்டி பிறகு மொழிக்கும் அழைத்து சென்றிருக்கிறது. ஒரு கதை சொல்லட்டா துவங்கி...ஆஸ்ட்ரிச் கதை வர தலைவனுக்கு அத்துப்படி !!!
விஜய் சேதுபதி செய்த மகத்தான ஓர் விஷயத்தை பற்றிய சிறப்பு பதிவு தான் இது...
சினிமாவின் ஆரம்ப நாட்களில் இருந்து இன்று வரை அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்து வருபவர்கள் திரையுலக பின்னணி கலைஞர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் அத்தகைய பல திறமையான பல திரையுலக பின்னணி கலைஞர்கள் இன்று திரையுலகில் இருந்தே வெளியேற்றப்பட்டு விட்டனர். அதற்கு முக்கியமான காரணம், வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில் நுட்பம்.
தமிழ் திரையுலகின் மூத்த திரையுலக பின்னணி கலைஞர்களை கௌரவப்படுத்தும் வகையில் கடந்த 2017-ம் ஆண்டு மே 1 ஆம் தேதி அன்று பிரம்மாண்ட விழா ஒன்று நடந்தது. உலகாயுதா நிறுவனத்தின் சார்பில் அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இயக்குனர் எஸ் பி ஜனநாதனின் தலைமையில் இந்த விழாவில் தமிழ் திரையுலகின் 100 மூத்த கலைஞர்களுக்கு தலா ஒரு சவரன் என மொத்தம் நூறு சவரன் தங்க பதக்கங்கங்களின் செலவை முழுவதுமாக ஏற்றிருந்தார் விஜய் சேதபதி.
அப்போது இந்த நிகழ்ச்சிப் பற்றிப் பேசிய இயக்குநர் எஸ்.பி ஜனநாதன், “நம் தமிழ் சினிமாவில் பல திறமையான திரையுலக பின்னணி கலைஞர்களும், அவர்களின் வேலைகளும், நவீன தொழில் நுட்பத்தால் மறைந்து வருகின்றது. அதனால் வயோலின், தபேலா என பல இசை கலைஞர்கள் மற்றும் திரையுலக பின்னணி கலைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். அத்தகைய உன்னதமான கலைஞர்களை கௌரப்படுத்த எங்கள் உலகாயுதா நிறுவனம் எடுத்து இருக்கும் முதற்கட்ட முயற்சி தான் இது. இவர்களுக்கு நூறு சவரன் தங்க பதக்கங்களை வழங்க முழு மனதோடு சம்மதம் தெரிவித்த விஜய் சேதுபதி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்” என்றார்.
அதன் பிறகு விஜய் சேதுபதி பேசிய போது, நான் இந்த நிலைமையில் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் திரையுலக பின்னணி கலைஞர்கள். அவர்களை இந்த தமிழ்சினிமாவின் 100 ஆண்டில் கௌரவிப்பது, எனக்கு கிடைத்த பாக்கியம் என்று தான் சொல்லுவேன். சினிமா என் குடும்பம் என்றால், திரையுலக பின்னணி கலைஞர்கள் என் குடும்ப உறுப்பினர்கள். இத்தகைய உன்னதமான வாய்ப்பை எனக்கு அளித்த இயக்குநர் எஸ் பி ஜனநாதன் சார் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன் என்று உற்சாகமாக கூறினார் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதியின் இப்படிப்பட்ட ஓர் செயல் நான்கு வருடமில்லை...நாற்பது வருடங்களானாலும் போற்றப்பட வேண்டிய ஒன்றாகும். இப்படி நாம் வரிசையாக வரி வரியாக பாராட்டினாலும்... மக்கள் செல்வன் கூறுவதோ, "இங்க இருந்து எடுத்தேன், அதான் கொடுத்தேன்"
அன்றைய நாளில் விஜய் சேதுபதி வழங்கிய அந்த "தங்கம்", பல தொழில்நுட்ப கலைஞர்களின் சாதனை பயணத்தில் மறக்க முடியாத ஓர் "அங்கம்". இதை கலாட்டா வாசகர்களுக்காக எழுதியதில், நிருபர் சக்தி பிரியன் ஹாப்பி அண்ணாச்சி.
மனம் கவர்ந்த முத்தக் கள்வன்...
சொன்ன சொல் மாறா சொல்லின் செல்வன்...
மக்கள் போற்றும் மக்கள் செல்வன்...
விஜய் சேதுபதியின் இச்செயலை பாராட்டி கலாட்டா காலச் சுவடுகளில் பதிப்பதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.