தமிழ் திரையுலகில் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஷ்ணு விஷால் நடித்து வெளிவந்த ராட்சசன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் மோகன்தாஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள FIR திரைப்படம் வருகிற பிப்ரவரி 11-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் FIR திரைப்படத்தை விஷ்ணு விஷாலின் VV ஸ்டூடியோஸ் தயாரிக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
இயக்குனர் மனு ஆனந்த் எழுதி இயக்கியுள்ள FIR திரைப்படத்தில் விஷ்ணு விஷால் உடன் இணைந்து மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் கௌரவ் நாராயணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில் தோனி கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ள FIR திரைப்படத்திற்கு அஸ்வத் இசை அமைத்துள்ளார்.
முன்னதாக வெளிவந்த FIR திரைப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், FIR திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு தற்போது நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது மேடையில் பேசிய நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை திரு.ரமேஷ் அவர்கள், “என் மகனால் நான் இன்று இந்த மேடையில் உங்கள் முன்னால் நிற்கிறேன்…” என சொன்னதும் நடிகர் விஷ்ணு விஷால் கண்கலங்கினார்.
மேலும் பத்திரிகையாளர்களுக்கும் ஊடகத்திற்கும் நன்றி தெரிவித்த திரு.ரமேஷ் அவர்கள் தொடர்ந்து FIR திரைப்படம் வெற்றி பெற படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து பேசினார். தனது தந்தையின் பேச்சைக் கேட்டு விஷ்ணு விஷால் கண்கலங்கும் அந்த வீடியோ இதோ…