அடுத்தடுத்து அதிரடி ஆக்சன் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் விஷாலின் நடிப்பில் மீண்டும் போலீஸ் படமாக தயாராகி இருக்கும் லத்தி திரைப்படம் வருகிற கிறிஸ்துமஸ் வெளியீடாக டிசம்பர் 22 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதனிடையே நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தனது திரை பயணம் குறித்தும் லத்தி திரைப்படம் குறித்தும் பல சுவாரசியமான தகவல்களை விஷால் பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் வரும் பொங்கல் வெளியீடாக ரிலீசாக இருக்கும் தளபதி விஜயின் வாரிசு மற்றும் அஜித்குமாரின் துணிவு ஆகிய திரைப்படங்களின் ரிலீஸ் குறித்தும் விஷால் மனம் திறந்து பேசினார். முன்னதாக இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் வாரிசு திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட, இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள துணிவு திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்நிலையில், அஜித் குமாரின் துணிவு படத்திற்கு 800 ஸ்க்ரீன்களும் தளபதி விஜயின் வாரிசு பணத்திற்கு 500 ஸ்க்ரீன்களும் ஒதுக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளிவந்துள்ளன இது எவ்வளவு ஆரோக்கியமானது என நீங்கள் நினைக்கிறீர்கள் எனக் கேட்டபோது, “இதெல்லாம் SURVIVAL OF THE FITTEST தான்... இப்போது இருக்கும் சினிமாவை அடுத்த ஒரு வருடத்தில்… இன்னும் ஆறு மாதம் கழித்து பாருங்கள். நீங்கள் துணிவு - வாரிசு பற்றி பேசுகிறீர்கள், சின்ன திரைப்படங்கள் பற்றி பேசுகிறீர்களா? சின்ன திரைப்படங்கள் எல்லாம் நசுங்கி, படம் நன்றாக இருக்கிறது என்று பேச்சு வந்தாலும் மக்கள் திரையரங்குகளுக்கு வருவதில்லை. OTT தளங்களுக்கு சென்று விட்டார்கள். பரவாயில்லை நான்கு வாரங்கள் கழித்து படம் பார்த்துக் கொள்ளலாம், இப்போது திரையரங்குகளுக்கு சென்று 2000 ரூபாய் செலவு செய்து டிக்கெட் வாங்கி கார் பார்க்கிங் கட்டணம் செலுத்தி பாப்கான் வாங்கி சாப்பிட்டு இந்த செலவெல்லாம் அவசியமே இல்லை என்று ஆகிவிட்டது. ஆனால் திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்கள் இப்போதும் இருக்கிறார்கள். நீங்கள் 500 - 800 என்ற எண்ணிக்கையில் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். மீண்டும் சொல்கிறேன் SURVIVAL OF THE FITTEST தான். நீங்கள் ஒரு லிஃப்டுக்குள் 11 ஹீரோயின்களை தள்ளி விடுங்கள் லிஃப்ட் மூடிய பிறகு கரண்டை கட் செய்து விடுங்கள் ஒரு மிகச்சிறந்த ரியாலிட்டி ஷோ கிடைக்கும். அதேபோல் 25 தயாரிப்பாளர்களை ஒன்று சேருங்கள். அவர்களை ஒன்று கூடி இது உனக்கு இது எனக்கு என முடிவு செய்ய சொல்லுங்கள் பல்வேறு விதமான கருத்துக்கள் வெளிவரும்” என விஷால் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இப்போது திரைப்படங்களின் ரிலீஸ் செய்தியை யார் தீர்மானிக்கிறார்..? என கேட்டபோது, “யாரும் இல்லை எங்கள் லத்தி படம் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. கிறிஸ்மஸ் வருகிறது புத்தாண்டு வருகிறது தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருகின்றன.. வேறு எந்த திரைப்படங்களும் அந்த சமயத்தில் ரிலீஸ் ஆகவில்லை எனவே நாங்கள் 22 ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு எடுத்தோம். அதேபோல் ஜனவரி 14-ஆம் தேதி வாரிசு மற்றும் துணிவு ரிலீஸ் ஆகிறது. எனவே அடுத்து ஜனவரி 26 ஆம் தேதி படங்களை ரிலீஸ் செய்ய தயாராகி விடுவார்கள். அதன் பிறகு பிப்ரவரி 14-ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகி விடுவார்கள். இப்போது தேதிகள் தான் மிகவும் முக்கியமானவை விழா கால நாட்கள் தான் முக்கியமானவை. எந்த தேதியில் படத்தை வெளியிடுகிறோமோ அது படத்தின் வெற்றியை தீர்மானிக்கிறது. ஒரு நல்ல திரைப்படம் தவறான தேதியில் வெளியானால் ரசிகர்களை சென்றடையாது. ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வர மாட்டார்கள். நீங்கள் உங்கள் இஷ்டத்திற்கு படத்தை ரிலீஸ் செய்ய முடியாது.” எனவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். நடிகர் விஷாலின் அந்த முழு பேட்டி இதோ…