ஹிரிதயம் திரைப்படத்தின் வெற்றிக் கூட்டணியான பிரணவ் மோகன்லால் - வினித் ஸ்ரீனிவாசன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் நிவின்பாலியும் இணைந்து இருக்கிறார். மலையாள சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராகவும் நடிகராகவும் திகழ்பவர் வினீத் ஸ்ரீனிவாசன். கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த சைக்கிள் படத்தின் மூலம் நடிகராக களமிறங்கிய வினீத் ஸ்ரீனிவாசன் கடந்த 2010 ஆம் ஆண்டு நடிகர் நவீன் பாலி கதாநாயகனாக அறிமுகமாகிய மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கினார். தொடர்ந்து நடிகராகவும் இயக்குனராகவும் அடுத்தடுத்து குறிப்பிடப்படும் திரைப்படங்களை வழங்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்த வினீத் ஸ்ரீனிவாசன் நடிப்பில் இந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் 4 படங்கள் வெளிவந்துள்ளன.
கேரளாவின் திருச்சூரில் நகை வியாபாரிக்கு நடந்த ஒரு க்ரைம் சம்பவத்தை அடிப்படையாக வைத்து வெளிவந்த தங்கம் திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்த வினீத் ஸ்ரீனிவாசன், தமிழில் வெளிவந்த 8 தோட்டாக்கள் திரைப்படத்தின் படத்தின் மலையாள ரீமேக்காக வெளிவந்த கொரோனா பேப்பர்ஸ் படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த பூக்காலம் என்ற மலையாள படத்தில் முக்கிய ஒரு வேடத்தில் நடித்த வினீத் ஸ்ரீனிவாசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்து மலையாள திரை வரலாற்றிலேயே மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த, 2018 ஆம் ஆண்டு கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை மையப்படுத்தி வெளிவந்த 2018 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இயக்குனராக வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிரிதயம் திரைப்படம் மொழிகளை கடந்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. பக்கா ரொமான்டிக் திரைப்படமாக வெளிவந்து ரசிகர்களின் மனதை வென்ற ஹிரிதயம் திரைப்படத்தில் நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் கதாநாயகனாக நடிக்க இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த வெற்றிக் கூட்டணி தற்போது மீண்டும் புதிய படத்தில் இணைகிறது. ஹிரிதயம் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வினீத் ஸ்ரீனிவாசன் எழுதி இயக்கும் இத்திரைப்படத்திற்கு “வருஷங்களுக்கு சேஷம்” என பெயரிடப்பட்டுள்ளது.
ஹிரிதயம் திரைப்படத்தின் தயாரிப்பாளரான விஷாக் சுப்பிரமணியம் தயாரிப்பில் வினீத் ஸ்ரீனிவாசன் எழுதி இயக்கும் “வருஷங்களுக்கு சேஷம்” திரைப்படத்தில் பிரணவ் மோகன்லால் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் கதையின் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, மின்னல் முரளி படத்தில் இயக்குனர் பெசில் ஜோசப், வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்த நீரஜ் மாதவ், நகைச்சுவை நடிகர் அஜு வர்கீஸ், நீதா பிள்ளை, அர்ஜுன் லால், நிகில் நாயர், ஷான் ரஹ்மான் ஆகியோரோடு இணைந்து மிக முக்கிய வேடத்தில் பிரேமம் படத்தின் நாயகன் நிவின்பாலி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் வினீத் ஸ்ரீனிவாசனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேரி லேண்ட் சினிமாஸ் பெருமையுடன் வழங்கும் இத்திரைப்படத்தின் இதர அறிவிப்புகள் வரும் நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஹிரிதயம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், அதே வெற்றி கூட்டணியில் தற்போது நிவின்பாலியும் இணைந்து இருக்கும் இந்த வருஷங்களுக்கு சேஷம் திரைப்படம் தற்போது இன்னும் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. வருஷங்களுக்கு சேஷம் படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் நடிகர் மோகன்லால் வெளியிட்ட பதிவு இதோ...