மக்களின் மனம் கவர்ந்த கதாநாயகர்களில் ஒருவராகவும் சிறந்த நடிகராகவும் படத்திற்கு படம் விதவிதமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அடுத்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பூஜை இன்று (மே19) நடைபெற்றது. முன்னதாக விஜய் சேதுபதி நடிப்பில் நீண்ட நாட்களாக ரிலீஸுக்காக காத்திருந்த யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படம் இன்று மே 19ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இயக்குனர் வெங்கட் கிருஷ்ணா ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த யாதும் ஊரே யாவரும் கேளிர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை பாகம் 1 திரைப்படத்தில் சூரி உடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். பெருமாள் வாத்தியார் எனும் மிரட்டலான கதாபாத்திரத்தில் மிக குறைவான காட்சிகளில் தோன்றினாலும் தனது நடிப்பால் மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி விடுதலை பாகம் 2 திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்புகளை கூட்டி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அடுத்த 4-5 மாதங்களில் விடுதலை பாகம் 2 திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட் திரையுலகிலும் தற்போது முழு கவனம் செலுத்தி வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஃபர்ஸி எனும் ஹிந்தி வெப்சீரிஸ் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஏஜென்ட் வினோத், அந்தாதுன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகும் மேரி கிறிஸ்மஸ் எனும் ஹிந்தி திரைப்படத்தில் கத்ரீனா கைஃப் உடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்துள்ளார். முன்னதாக காந்தி டாக்ஸ் எனும் மௌனப் படத்திலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதல் படமான மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்காக உருவாகி இருக்கும் மும்பைக்கர் படத்திலும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி இயக்குனர் அட்லி முதல் முறை பாலிவுட்டில் இயக்குனராக களமிறங்கி இருக்கும் ஜவான் திரைப்படத்திலும் நடித்துள்ளார். ஷாரூக் கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வரிசையில் அடுத்ததாக கடந்த 2018ல் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் இயக்குனர் ஆறுமுக குமாருடன் மீண்டும் இணைந்து இருக்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. மேலும் யோகி பாபு மற்றும் ருக்மணி வசந்த் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தின் பட பூஜை தற்போது மலேசியாவில் உள்ள ஒரு கோவிலில் நடைபெற்றுள்ளது. காக்கா முட்டை படத்தின் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த கடைசி விவசாயி திரைப்படத்தை வெளியிட்ட 7Cs என்டர்டைன்மென்ட் நிறுவனம் தனது 5வது தயாரிப்பாக இந்த புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது. இன்னும் இதர தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியாவில் நடைபெற்ற விஜய் சேதுபதியின் இந்த புதிய படத்தின் படப் பூஜை புகைப்படங்கள் இதோ…