தனக்கென தனி பாணியில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன் அட்டகாசமான நடிப்பால் மகிழ்வித்து வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அவரது 51வது திரைப்படமாக தற்போது தயாராகி வரும் திரைப்படம் தான் VJS51. இயக்குனர் ஆறுமுககுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த VJS51 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலேசியாவில் பூஜை உடன் தொடங்கப்பட்ட தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்து வெளிவந்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வித்தியாசமான நகைச்சுவை படமாக நல்ல வரவேற்பை பெற்றது. அந்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் ஆறுமுககுமார் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்திருக்கும் இந்த VJS51 திரைப்படமும் பக்கா பொழுதுபோக்கு படமாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
விஜய் சேதுபதியுடன் இணைந்து ருக்மணி வசந்த் நாயகியாக நடித்திருக்கும் இந்த VJS51 திரைப்படத்தில் யோகி பாபு மிக முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் பப்லு பிரித்விராஜ் மற்றும் திவ்யா பிள்ளை ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் VJS51 திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கடந்த சில வாரங்களாக மலேசியாவில் VJS51 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் மலேசியாவின் பிரசித்தி பெற்ற 10 குகை முருகன் கோவில் முன்பு மக்கள் செல்வன் விஜய் சேதுபதியோடு அனைவரும் ஒன்றிணைந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு VJS51 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர். அந்தப் புகைப்படம் மற்றும் பதிவு இதோ...
தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஹிந்தியில் கத்ரீனா கைஃப் உடன் இணைந்து நடித்திருக்கும் மேரி கிறிஸ்மஸ் திரைப்படம் வருகிற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. முன்னதாக விடுதலை பாகம் 1 படத்தை தொடர்ந்து அதன் அடுத்த பாகமாக, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி உடன் இணைந்து பெருமாள் வாத்தியார் எனும் மிரட்டலான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள விடுதலை பாகம் 2 திரைப்படம் அடுத்த சில மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தனது 50வது திரைப்படமாக குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவாகும் மகாராஜா திரைப்படத்தில் தற்போது நடித்து வரும் விஜய் சேதுபதி, அடுத்ததாக தேசிய விருது பெற்ற "காக்கா முட்டை" இயக்குனர் மணிகண்டன் உடன் கடைசி விவசாயி படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் மக்கள் செல்வன் புதிய தமிழ் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். மேலும் காந்தி டாக்ஸ் எனும் மௌனப் படத்திலும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார் . இந்த வரிசையில் தனது அடுத்த புதிய திரைப்படமாக இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் TRAIN எனும் திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். பிசாசு 2 திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் இந்த TRAIN திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் தொடங்க இருப்பதாக தொடக்க குழுவினர் அறிவித்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.