மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் பாலிவுட் ஸ்டார் ஷாகித் கபூர் நடிப்பில் ஃபேமிலி மேன் இயக்குனர்களான ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இணைய தொடர் ஃபர்ஸி. சட்ட விரோதமாக ரூபாய் நோட்டுக்களை அச்சிடும் வாலிபராய் வரும் ஷாகித் கபூர் மற்றும் குழுவினரை பிடிக்க மிரட்டலான அதிகாரியாக வரும் விஜய் சேதுபதி என்ற கதைக்களத்தில் அதிரடியான கிரைம் திரில்லாராக உருவாகியிருக்கும் ஃபர்ஸி தொடர் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வரும் பிப்ரவரி 10 ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தொடர் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொள்ள படத்தின் இயக்குனர்கள் டிகே மற்றும் ராஜ் மற்றும் கதாநாயகன் ஷாகித் கபூர், விஜய் சேதுபதி மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் நமது கலாட்டா பிளஸ் மீடியா பேட்டியில் கலந்து கொண்டனர். இதில் பெருமபாலான மொழிகளுடனும் இந்தி திரைப்படத்திலும் நடித்ததால் நிங்கள் தற்போது பான் இந்தியா ஸ்டார் ஆகி விட்டீர்கள் என்று நடிகர் விஜய் சேதுபதியை கேட்டதற்கு, அவர் அதற்கு
"இல்லை நான் பான் இந்தியா ஸ்டாரில்லை.. நான் நடிகர். பான் இந்திய என்ற நிலைப்பாட்டில் எனக்கு உடன்பாடில்லை. சில நேரம் அது நிறைய அழுத்தத்தை கொடுக்கும். அதனால் நடிகராய் இருப்பது சிறப்பு. நடிகர் சங்கத்துக்கு பெயர் வைக்கலாம்னு முடிவு பண்ணும் போது, 'இந்திய நடிகர் சங்கம்', 'தென்னிந்திய நடிகர் சங்கம்', னு பேசும்போது கவுண்டமனி சார் சொன்னாரு 'நடிகர் சங்கம்' னு வையுங்கள் முடிஞ்சு போயிடுனும் னு சொன்னாரு. அது போல தான் இது. பான் இந்தியா நடிகர் என்று இல்லாமல் நடிகர் என்று இருப்பது நல்லது. எந்தவொரு அடியாளமும் நடிகருக்கு முன்னால் இருக்க வேண்டாம். அதுவே போதுமானது". என்று குறிப்பிட்டார் விஜய் சேதுபதி. மேலும் அவர் இதுகுறித்து "நான் எல்லா மொழி படங்களில் நடிக்க விரும்புகிறேன்.எனக்கு வாய்ப்பு கிடைத்தால் பங்காளத்திலும் குஜராத்தியிலும் நடிப்பேன்" என்றார்.
அவரை தொடர்ந்து நடிகை ராஷி கண்ணா பான் இந்திய ஸ்டார் என்ற நிலைப்பாடு குறித்து, “எனக்கு இந்த பான் இந்திய ஸ்டார், இந்தி நடிகர், தமிழ் நடிகர் என்ற பிரிவினை பிடிக்காது. நாங்களெல்லாம் நடிகர்கள் பிறகு ஏன் இந்த பிரிவினை.எந்த நடிகரும் எங்களை பான் இந்திய நடிகர் என்று அழையுங்கள் என்று கேட்பதில்லை.அந்த டைட்டில் எங்கிருந்து வருகின்றது என்று எனக்கு தெரியவில்லை. ஏற்கனவே பாலிவுட் டோலிவுட், கோலிவுட் என்ற பிரிவினை இருக்கின்றது. சமீபத்தில் தென்னிந்திய திரைப்படம் வட இந்திய திரைப்படம் என்று மாறிவிட்டது.” என்று குறிப்பிட்டார்.
அவரை தொடர்ந்து பான் இந்தியாவில் நடிப்பது குறித்து ஷாகித் கபூரிடம் கேட்ட போது, "எனக்கு ஒரே மொழியில் இருப்பது சௌகரியம் என்பது பிடிக்காது. ஒரு நடிகனாக அசௌகரியத்தை விரும்புவன் நான். எனக்கு மற்ற மொழிகளில் நடிக்க வாய்ப்பு வர வில்லை. நான் என் மொழியில் சிறந்து விளங்குகிறேன். நான் அந்த மொழியில் நடிக்கும்போது என்னுடைய தனிச்சிறப்புகளையும் அதில் கொடுக்க முடிகிறது. மற்ற மொழி கற்று கொண்டு பேச முடியும். நடிப்பதற்காக ஆனால் அதில் சில நுணுக்கங்களை கையாளுவதில் எனக்கு இன்னும் பயம் உள்ளது" என்று குறிப்பிட்டார்.
மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை நமது கலாட்டா பிளஸ் பேட்டியில் பகிர்ந்து கொண்ட ஃபர்ஸி. தொடர் குழுவினரின் முழு வீடியோ இதோ..