தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவரான தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாரிசு திரைப்படம் பக்கா ஃபேமிலி என்டர்டெய்னராக அனைத்து வயது ரசிகர்களாலும் ரசிக்கப்பட்ட நிலையில், தற்போது தனது அடுத்த படமான தளபதி67 திரைப்படத்தில் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்துள்ளார்.
இந்திய சினிமாவிலேயே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படங்களில் ஒன்றாக கவனிக்கப்படும் தளபதி 67 திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் 14 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை திரிஷா கதாநாயகியாக இணைகிறார். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் மிஷ்கின், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மாத்யூ தாமஸ் மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
கடந்த ஜனவரி 2ம் தேதி தொடங்கப்பட்ட தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அடுத்த கட்டமாக தற்போது காஷ்மீரில் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே கடந்த ஓரிரு தினங்களாக ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தளபதி 67திரைப்படத்தின் அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளி வருகின்றன.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைக்கும் தளபதி 67 திரைப்படத்திற்கு, சதீஷ்குமாரின் கலை இயக்கத்தில், தினேஷ் மாஸ்டரின் நடன இயக்கத்தில், அன்பறிவு மாஸ்டர்கள் ஸ்டன்ட் இயக்குனர்களாக பணியாற்றுகின்றனர். முன்னதாக நேற்று பிப்ரவரி 1ம் தேதி தளபதி 67 திரைப்படத்தின் படப்பூஜை வீடியோ வெளியானது.
ஏற்கனவே லோகேஷ் கனகராஜின் கைதி திரைப்படத்தின் கனெக்ட் விக்ரம் படத்தில் இடம்பெற்றதை தொடர்ந்து LCU என்ற ஒரு யுனிவர்ஸ் உருவானது. இந்த LCU-ல் தளபதி 67 திரைப்படமும் இடம் பெறுமா என ஆவலோடு ரசிகர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் வெளிவந்த படப்பூஜை வீடியோவில் கைதி படத்தில் நெப்போலியன் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்த ஜார்ஜ் மரியன் அவர்கள் இடம்பெற்று இருப்பதால் தளபதி 67 LCUல் இருக்கும் என்ற ஹிண்ட் கிடைத்துள்ளதாக தற்போது ரசிகர்களிடையே பெரும் உற்சாகம் கிளம்பியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் அடுத்தடுத்து வெளிவரும் அப்டேட்களில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.