தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வெங்கட் பிரபு இன்று தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனக்கென தனி பாணியில் கலக்கலான என்டர்டெய்னிங் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் வெங்கட் பிரபு அவர்களின் பிறந்தநாளுக்கு கலாட்டா குழுமம் தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அந்த வகையில் இயக்குனர் வெங்கட் பிரபு அவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில், படத்தின் அதிரடியான அப்டேட் ஒன்றையும் தளபதி 68 பட குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் பூஜை உடன் தொடங்கப்பட்ட தளபதி 68 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அடுத்த கட்டமாக தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்புக்காக சமீபத்தில் லியோ வெற்றி விழாவை முடித்த பிறகு தளபதி விஜய் தாய்லாந்து புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில் தாய்லாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தளபதி 68 படப்பிடிப்பில் இருக்கும் இயக்குனர் வெங்கட் பிரபு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்திருக்கும் படக்குழுவினர், நேற்று நவம்பர் 6ஆம் தேதி இரவில் தாய்லாந்தில் தளபதி 68 திரைப்படத்திற்கான மிக முக்கியமான ஒரு ஆக்சன் பிளாக் படமாக்கப்பட்டதாகவும் அதனால் இன்று நவம்பர் 7ஆம் தேதி இயக்குனர் வெங்கட் பிரபு அவர்களுக்கு அவரது பிறந்த நாளில் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
தளபதி விஜய் படங்களில் இருக்கும் ஆக்சன் காட்சிகள் எப்போதும் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த முறை இயக்குனர் வெங்கட் பிரபு ஸ்டைலில் இருக்கும் இந்த ஆக்சன் எப்படி இருக்கும் என தளபதி விஜய் ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில் படக்குழு கொடுத்த இந்த அப்டேட் அவர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.
என்றென்றும் மக்களின் மனம் கவர்ந்த நாயகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளிவந்த லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இருப்பதை தொடர்ந்து அதன் வெற்றி விழாவை நிறைவு செய்துவிட்டு தற்போது தனது 68வது படமாக உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் தற்போது மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். முதல்முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் கதையின் நாயகனாக நடிக்கும் இந்த தளபதி 68 திரைப்படத்தில் கிட்டத்தட்ட புதிய கீதை படத்திற்கு பிறகு 20 ஆண்டுகளுக்கு பின் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி விஜய் உடன் இணைந்து மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக நடிக்கும் தளபதி 68 திரைப்படத்தில், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, ஜெயராம், மோகன், யோகி பாபு, அஜ்மல், விடிவி கணேஷ், வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோர் உடன் பிரேம்ஜி அமரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுணி தளபதி 68 திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய வெங்கட்ராஜன் படத்தொகுப்பு செய்கிறார். ராஜீவன் அவர்களின் கலை இயக்கத்தில் அதிரடி ஆக்சன் படமாக உருவாகும் இந்த தளபதி 68 திரைப்படத்திற்கு திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றுகிறார். விறுவிறுப்பான பக்கா ஆக்சன் என்டர்டைனர் திரைப்படமாக இயக்குனர் வெங்கட் பிரபு - தளபதி விஜய் கூட்டணியில் உருவாகி வரும் இந்த தளபதி 68 திரைப்படத்தின் இதர அறிவிப்புகள் வரும் நாட்களில் தொடர்ச்சியாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.