நாளுக்கு நாள் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவர இருக்கும் லியோ திரைப்படத்தின் கர்நாடக ரிலீஸ் உரிமையை முன்னணி நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. இந்திய சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்ட முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் தென்னிந்திய சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாகவும் திகழும் தளபதி விஜய் அடுத்ததாக முதல்முறை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது திரைப்பயணத்தில் 68வது திரைப்படமாக உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் பிகில் படத்திற்கு பின் தளபதி 68 படத்தை தயாரிக்கிறது. நீண்ட காலமாக ரசிகர்கள் காத்திருந்த தளபதி விஜய் - யுவன் சங்கர் ராஜா கூட்டணி தளபதி 68 படத்தில் இணைந்திருக்கிறார். இந்த தளபதி 68 திரைப்படத்தின் இதர அறிவிப்புகள் அனைத்தும் லியோ திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு ஒவ்வொன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பக்கா அதிரடி ஆக்சன் பிளாக் திரைப்படமாக உருவாகி வருகிறது லியோ திரைப்படம். தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கும் திரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிப்பில் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.
அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 6 மாதங்களிலு 125 நாட்கள் நடைபெற்று சமீபத்தில் நிறைவடைந்தது. 50% தளபதி விஜய் படம் 50% லோகேஷ் படம் என்று இல்லாமல் லியோ படம் 100% லோகேஷ் படமாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. PAN INDIA திரைப்படமாக ரிலீஸ் ஆகும் லியோ திரைப்படத்தை வெளிநாடுகளில் இதுவரை எந்த தென்னிந்திய படமும் ரிலீஸ் ஆகாத அளவிற்கு பிரம்மாண்டமாக வெளியிட ஏற்பாடுகள் நடைபெறுவதாக தயாரிப்பாளர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கர்நாடகாவில் லியோ திரைப்படத்தின் ரிலீஸ் உரிமத்தை ஸ்வாத் என்டர்பிரைசஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு இதோ…