தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் வள்ளி மயில் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியானது. வித்தியாசமான அரசியல் கதை களத்தில் பீரியட் படமாக வர இருக்கும் இந்த வள்ளி மயில் திரைப்படத்தில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து சத்யராஜ் மற்றும் ஃபரியா அப்துல்லா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் தம்பி , பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா, சுனில், ரெடின் கிங்ஸ்லி, கனி (குக் வித் கோமாளி), ஜிபி முத்து, அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் இந்த வள்ளி மயில் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். பாஸ்கர் சக்தி வசனங்களை எழுத, விவேகா மற்றும் யுகபாரதி ஆகியோர் வள்ளி மயில் படத்தின் பாடல்களை எழுதி இருக்கின்றனர். விஜய் கே சக்கரவர்த்தி & வாஞ்சிநாதன் முருகேசன் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் வள்ளி மயில் படத்திற்கு ஆண்டனி படத்தொகுப்பு செய்ய டி.இமான் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் வள்ளி மயில் படத்தின் டீசர் தற்போது வெளிவந்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வள்ளி மயில் டீசர் இதோ…
இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக வலம் வரும் விஜய் ஆண்டனி அவர்கள் நடிப்பில் கடைசியாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த பொலிட்டிக்கல் திரில்லர் படமாக அடுத்து வெளிவர தயாராகி இருக்கும் ரத்தம் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதைத் தொடர்ந்து வரிசையாக விஜய் ஆண்டனி நடிப்பில் வித்தியாசமான கதை களங்களில் அடுத்தடுத்த படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. அந்த வகையில் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்திருக்கும் மழை பிடிக்காத மனிதன் படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து முதல் முறை ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் விஜய் ஆண்டனி ரோமியோ எனும் புதிய திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இதனிடையே ஹிட்லர் எனும் மற்றொரு புதிய திரைப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார் திரைப்படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து விஜய் ஆண்டனி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உருவான ஆக்ஷன் திரைப்படமான அக்னி சிறகுகள் திரைப்படம் நீண்ட காலமாக ரிலீஸ்க்காக காத்திருக்கிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் அக்னி சிறகுகள் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் அக்டோபர் மாதத்தில் படம் வெளிவராததால் விரைவில் மீண்டும் புது ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை இயக்கி நடித்த விஜய் ஆண்டனி படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், விரைவில் மீண்டு வந்ததோடு தொடர்ந்து தனது திரை பயணத்திலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.