இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்கள் விரும்பும் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உயரந்த விஜய் ஆண்டனி அவர்கள் தொடர்ந்து நடிகராக புதிய அவதாரம் எடுத்து அடுத்தடுத்து அசத்தலான திரைப்படங்களில் நடித்தார். அந்த வகையில் நான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஜய் ஆண்டனி அவர்கள் தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், காளி, திமிரு புடிச்சவன், கொலைகாரன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக மக்களின் மனதை கவர்ந்தார். இந்த வரிசையில் கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த கோடியில் ஒருவன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. நடிகராக மட்டுமல்லாமல் படத்தொகுப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக வலம் வரும் விஜய் ஆண்டனி அவர்கள் முன்னதாக நடித்த தமிழரசன், காக்கி, அக்னி சிறகுகள் ஆகிய திரைப்படங்கள் நிறைவடைந்து ரிலீஸுக்காக காத்திருக்கின்றன.
மேலும் இயக்குனர் பாலாஜி K குமார் இயக்கத்தில் திரில்லர் படமாக தயாராகியுள்ள கொலை, ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள மழை பிடிக்காத மனிதன், தமிழ் படம் படத்தின் இயக்குனர் CS.அமுதன் இயக்கத்தில் அதிரடியான பொலிட்டிக்கல் த்ரில்லர் படமாக தயாராகியுள்ள ரத்தம் மற்றும் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் வள்ளி மயில் ஆகிய திரைப்படங்களும் விரைவில் ரிலீஸாக தயாராகி வருகின்றன. இதனிடையே தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள விஜய் ஆண்டனி தனது சூப்பர் ஹிட் திரைப்படமான பிச்சைக்காரன் 2 படத்தின் இரண்டாவது பாகமாக தற்போது தயாராகி வரும் பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி நடித்து வருகிறார். முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலேசியாவில் நடைபெற்ற பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது பயங்கர விபத்துக்குள்ளான விஜய் ஆண்டனி பலத்த காயம் அடைந்தார்.
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து காவியா தப்பர் கதாநாயகியாக நடிக்க, ராதா ரவி, மன்சூர் அலிகான், ஹரிஷ் பெரடி, ஜான் விஜய், தேவ் கில், யோகி பாபு, YG.மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஓம் நாராயணன் ஒளிப்பதிவில் உருவாகும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனியே படத்தொகுப்பும் செய்து இசையமைக்கிறார். இந்தக் கோடை விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு வெளியீடாக பிச்சைக்காரன் 2 திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், பிச்சைக்காரன் 2 திரைப்படத்திலிருந்து கோயில் சிலையே எனும் வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பிச்சைக்காரன் படத்தில் இடம்பெற்ற நூறு சாமிகள் இருந்தாலும் எனும் தாய் பாசத்தை போற்றும் செண்டிமெண்ட் பாடல் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தது போலவே, அண்ணன் தங்கை பாசத்தை அழகாக கூறும் வகையில் இந்த கோயில் சிலையே பாடல் வெளியாகி அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. எமோஷ்னலான அந்த வீடியோ பாடல் இதோ…