இசையமைப்பாளர் நடிகர் தயாரிப்பாளர் படத்தொகுப்பாளர் இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக தொடர்ந்து மக்களை மகிழ்வித்து வரும் விஜய் ஆண்டனி அவர்கள் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கொலை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து வரிசையாக விஜய் ஆண்டனி நடிப்பில் வித்தியாசமான கதை களங்களில் அடுத்தடுத்த படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. அந்த வகையில் மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து விஜய் ஆண்டனி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உருவான ஆக்ஷன் திரைப்படமான அக்னி சிறகுகள் திரைப்படம் நீண்ட காலமாக ரிலீஸ்க்காக காத்திருக்கிறது. வருகிற அக்டோபர் மாதத்தில் அக்னி சிறகுகள் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்திருந்தனர். முன்னதாக ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்திருக்கும் மழை பிடிக்காத மனிதன் படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வள்ளி மயில் எனும் படத்தில் தற்போது நடித்து வரும் விஜய் ஆண்டனி முதல் முறை ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் ரோமியோ எனும் புதிய திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த வரிசையில் விஜய் ஆண்டனி நடிப்பில் வித்தியாசமான பொலிட்டிக்கல் திரில்லர் படமாக அடுத்து வெளிவர தயாராகி இருக்கும் திரைப்படம் தான் ரத்தம். தமிழ் படம் படத்தின் இயக்குனர் CS.அமுதன் அவர்களின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து மஹிமா நம்பியார் நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த ரத்தம் திரைப்படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, TS.சுரேஷ் படத்தொகுப்பு செய்கிறார். கண்ணன் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். வருகிற அக்டோபர் 6ம் தேதி விஜய் ஆண்டனியின் ரத்தம் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் ரத்தம் படத்தின் இயக்குனர் CS.அமுதன், விஜய் ஆண்டனி மற்றும் நடிகை மகிமா நம்பியார் ஆகியோர் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்தனர். இதில் ரத்தம் படம் சார்ந்து பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அப்படியாக ரத்தம் திரைப்படத்தில் ஒரு ரிப்போர்ட்டர் அனுபவம் குறித்து விஜய் ஆண்டனி அவர்களிடம் கேட்டபோது,
“இந்த உலகம் மிகவும் கஷ்டமான ஒரு உலகம் குறிப்பாக க்ரைம் பத்திரிக்கையாளராக பணியாற்றுவது இன்னும் கஷ்டமானது. காவல் துறையினரை தாண்டி சில இடங்களில் இறங்கி வேலை செய்ய வேண்டிய சூழ்நிலைகள் வரும். சொல்லப்போனால் சில சமயங்களில் காவல் துறையினரே சில விஷயங்களை இங்கிருந்து எடுப்பார்கள். காவல்துறையினருக்கே உதவக்கூடிய ஒரு துறை தான் இந்த க்ரைம் பத்திரிக்கையாளர்கள். ரொம்பவும் ரிஸ்க்கான விஷயம். அந்தத் துறை எல்லாம் எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை. காவல்துறைக்கு கூட ஒரு பெரிய அந்தஸ்து இருக்கிறது. ஒரு பேட்ச் அணிந்து காக்கி உடை அணிந்து சென்றால் அவர்களுக்கு கொஞ்சம் ஈசியாக இருக்கும். ஆனால் அவர்கள் அதைவிட ரிஸ்க்கான எல்லா விஷயங்களையும் துப்பாக்கி இல்லாமல் சந்திக்கிறார்கள். பாதுகாப்பில்லாமல் பார்க்கிறார்கள். எந்தவித கொலைகாரர்கள் அல்லது செத்தவர்கள் இடமிருந்து வரக்கூடிய லஞ்சமோ.. எதுவுமே வராது. அல்லது வேறு ஏதாவது சொகுசான விஷயங்கள் இருக்குமா என்று பார்த்தால் எதுவுமே கிடையாது. பெரிய பாதுகாப்பு எதுவுமே கிடையாது கொஞ்சம் பாவமாக இருக்கும். அந்த பத்திரிக்கை துறை மிகவும் கொடூரமானது. ஒரு காவல்துறை அதிகாரி உண்மையாக இருக்க முடியாது ஒரு பத்திரிக்கையாளர் அதிக உண்மையாக இருக்கவே முடியாது. இருக்க விடவே மாட்டார்கள். இந்த சமூகம் அப்படித்தான் இருக்கிறது. உங்களால் சரியாக இருந்து விடவே முடியாது. உங்களால் உண்மையைப் பேசிவிட முடியாது.” என்றார். இன்னும் பல முக்கிய விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி அவர்களின் அந்த முழு பேட்டி இதோ…