விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 திரைப்படம் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை மே 19ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. முதல்முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்த விஜய் ஆண்டனி மலேசியாவில் நடைபெற்ற பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கி மோசமான எலும்பு முறிவுகளோடு பலத்த காயமடைந்தார். இதனை அடுத்து தற்போது தீவிர சிகிச்சைகள் மேற்கொண்டு பூர்ண குணமடைந்து மீண்டு வந்திருக்கிறார். இந்நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் WIDE ANGLE நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி, நமது திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களுடனான நேர்காணலில் தனது வாழ்க்கை மற்றும் திரை பயணத்தின் அனுபவங்களையும் சுவாரசியமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், பிச்சைக்காரன் 2 படத்தில் இடம் பெற்றுள்ள பிக்கிலி மற்றும் ஆன்டி பிக்கிலி என்ற பெயர்களுக்கான அர்த்தம் குறித்து கேட்டபோது,

"பணம் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு 5000 வருடம் இருக்குமா? அதுவரை வறுமை என்பது இல்லை. எப்போது பணம் கண்டுபிடிக்கப்பட்டதோ அதனுடைய முக்கியத்துவம் தெரிந்தவர்கள், அதனுடைய மதிப்பை தெரிந்தவர்கள், அதன் சக்தியை தெரிந்தவர்கள் அதை எடுத்துக் கொண்டார்கள். இப்போதும் கூட நிறைய பேருக்கு பணத்தைப் பற்றி தெரியாது. அந்த ஒரு அறியாமையில் இருப்பவர்கள் பணத்தை சரியாக கையாளாமல் இருக்கிறார்கள். பணம் வந்ததில் இருந்து பார்த்தீர்கள் என்றால் சமநிலை இல்லை உலகத்தில்.. இது இல்லாமல் போவது பற்றி கவலை இல்லை அவன் கஷ்டப்பட்டு உழைத்தான் பணம் வைத்திருக்கிறான் இவன் உழைக்கவில்லை பணம் இல்லை அதனால் பரவாயில்லை, ஆனால் நிறைய அநியாயங்கள்... இந்தியாவின் பெரிய பணக்காரர் ஒரு பெரிய கட்டிடத்தில் குடியிருப்பார்... அவருடைய கண்ணுக்கட்டிய தூரத்தில் குடிசைகள் தெரியும் என்கிற அளவுக்கு பயங்கரமான வித்தியாசங்கள் இருக்கின்றன. இரண்டு வேளை சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் பல பேர் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் பணம் தான் என்பது என்னுடைய கருத்து. ஒருவேளை பணம் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் ஒருவர் ஒரு அளவிற்கு மேல் சொத்தை சேர்த்து வைத்திருக்க முடியாது. பணக்காரர்கள் பணக்காரர்கள் ஆகி கொண்டே இருக்கிறார்கள் ஏழைகள் ஏழைகளாகிக் கொண்டிருக்கிறார்கள் அது கூட பிரச்சினை இல்லை, ஆனால் பணம் கொஞ்சம் அதிகமாக வைத்திருப்பவர்கள் ஏழைகளை அடிமைப்படுத்த பார்க்கிறார்கள். அந்த பணத்துடைய சக்திக்கு முன்பு ஏழைகள் எதுவும் செய்ய முடியாது. தான் உழைத்து சம்பாதித்து பணக்காரராக இருப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அந்த திமிரையும் அதை ஏவி ஏழைகளை அடிமைப்படுத்த நினைப்பவருக்கும் பிக்கிலி என்ற ஒரு பெயரை வைக்கலாம் என்ன முடிவு செய்தேன். பணக்காரன் - ஏழை என்ற ஒரு பெயர் இருக்கிறது. கஞ்சன் - செலவாளி என்ற ஒரு பெயர் இருக்கிறது. ஆனால் பண திமிரில் அலைபவர்களுக்கு எந்த பெயரும் கிடையாது என்பதால் அவர்களை பிக்கிலி என சொல்கிறேன். அதற்கு எதிரானவன் ஆன்டி பிக்கிலி. அது ஏன் என்பது படம் பார்க்கும்போது உங்களுக்கு தெரியும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்து செல்லும் அவ்வளவுதான்." என தெரிவித்துள்ளார். விஜய் ஆண்டனியின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.