காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திற்கு பிறகு முதல் முறையாக அஜித்குமார் உடன் இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைவதாக இருந்த நிலையில் சமீபத்தில் அத்திரைப்படம் (AK62) கைவிடப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இதனை அடுத்து திரைப்படத்தை தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவரான மகிழ் திருமேனி இயக்குவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற விக்னேஷ் சிவன் ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் பல சுவாரசியமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
அந்த வகையில் AK62 வாய்ப்பு கிடைத்தும் நடைபெறாமல் போனது குறித்து பேசிய இயக்குனர் விக்னேஷ் சிவன், தான் சினிமாவில் வந்ததிலிருந்து சந்தித்த ஏற்ற இறக்கங்கள் அனைத்தையும் குறிப்பிட்டு நானும் ரவுடிதான் படம் தோற்றுவிட்டது என்ற நிலையில் படம் ஜெயித்த செய்தி கேட்டதும் AK62 திரைப்படம் இயக்கப் போகிறோம் என்ற நிலையில் படம் கைவிடப்பட்டதும் ஒரே மாதிரியான தருணங்கள் தான் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “இப்போது இயக்குனர் மகிழ் திருமேனி அவர்களை எடுத்துக் கொள்வோம். அவர் ஒரு அட்டகாசமான இயக்குனர். பிரமாதமாக எழுதி அவர் கொடுக்கும் திரைப்படங்கள் மிகவும் அழுத்தமாக இருக்கும். நான் நேற்று வந்த ஒரு இயக்குனர்... எனக்கு பத்து வருடம் முன்பு வந்தவர் இயக்குனர் மகிழ் திருமேனி. அவருக்கு பெரிய நட்சத்திர நடிகர்களோடு படம் இயக்குவதற்கான வாய்ப்பு முன்பே கிடைத்திருக்க வேண்டும். இப்படி ஒரு வழி நடக்கும்... அது அவருக்கான திருப்புமுனையாக இருக்கும். அப்படித்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அவருக்கு ஒரு திருப்புமுனை என்றால் இப்போது நாம் நேற்று வந்தோம், திடீரென முன்னால் போய்விட்டோம். மீண்டும் ஒரு நான்கு படிகள் பின்னால் வருகிறோம் அதனால் தப்பே கிடையாது. அவர்கள் ஒரு நான்கு படிகள் முன்பே போயிருக்க வேண்டியது. அவர்களுக்கு அந்த வாய்ப்பு இப்போது வருகிறது. எனவே அவர் ஒரு நல்ல படம் கொடுக்கப் போகிறார். ஒரு ரசிகனாக அதை நான் போய் கொண்டாடத்தான் போகிறேன். அது எந்த ஏரியாவுக்குள் எப்படி சுற்றி வந்தாலுமே அது எல்லாமே சரியாக தான் நடக்கும். அவர் ஒரு நல்ல படத்தை இயக்கப் போகிறார் அதை நாம் பயங்கரமாக கொண்டாட போகிறோம் திரும்பவும் நமக்கு ஒரு நாள் ஒரு வாய்ப்பு கிடைக்கலாம். அந்த வாய்ப்பு கிடைத்தாலும் சந்தோசம் தான் கிடைக்காவிட்டாலும் சந்தோசம் தான். என் வாழ்க்கையை நான் எப்படி பார்ப்பேன் என்றால் எனக்கு எந்த வேலை கிடைத்தாலும் அதை மிகவும் சந்தோஷமாக செய்கிறேன். நான் இப்போது வேறு ஒரு படத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். அந்த படத்தை மிகவும் சரியாக செய்ய வேண்டும் என்று நாம் நினைப்போம் அது ஹிட் ஆனாலும் பிளாப் ஆனாலும் அடுத்தடுத்து போய்க் கொண்டே தான் இருக்க வேண்டுமே தவிர எங்கேயுமே எதுவுமே நெகட்டிவ் என்ற ஒரு விஷயமே கிடையாது. எல்லாமே பாசிட்டிவ் தான் அப்படியே போய்க் கொண்டே இருக்க வேண்டும் வாழ்க்கையை ஜாலியாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்" விக்னேஷ் சிவன் பதிலளித்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனின் அந்த முழு பேட்டி இதோ…