மலையாள திரையுலகின் சிறந்த நடிகராக திகழ்ந்த நடிகர் நெடுமுடி வேணு அவர்கள் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் மிகப் பிரபலம் அடைந்தார். தொடர்ந்து அந்நியன் திரைப்படத்திலும் நடிகர் விக்ரமின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் A.L.விஜய் இயக்கத்தில் பொய் சொல்ல போறோம் மற்றும் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ்குமார் நடித்த சர்வம் தாள மயம் ஆகிய திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நெடுமுடி வேணு, கடைசியாக ஷங்கரின் இந்தியன் 2 படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மிருதங்க வித்வானான நெடுமுடி வேணு ஆரம்பத்தில் பத்திரிகையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
மலையாள சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவரான நெடுமுடி வேணு அவர்கள் மேடை நாடகக் கலைஞராக தனது நடிப்பு பயணத்தை தொடங்கி பின்னர் மலையாள சினிமாவில் நடிகராக 1978-ம் ஆண்டு அறிமுகமானார். தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்து. 3 தேசிய விருதுகள், 6 கேரள மாநில விருதுகள், 3 பிலிம்ஃபேர் விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றவர்.
இந்நிலையில் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த நடிகர் நெடுமுடி வேணு கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நெடுமுடி வேணு அவர்கள் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 73 வயதான நெடுமுடி வேணு அவர்களின் மறைவுக்கு ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகம் இரங்கல் தெரிவித்து வருகிறது.
Farewell Venu uncle! Your body of work and your expertise over the craft will forever be research material for generations to come! Rest in peace legend! #NedumudiVenu pic.twitter.com/VzZ4LF49Nq
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) October 11, 2021