மலையாள திரையுலகின் மூத்த பாடலாசிரியரான பூவாசல் காதர், கட்டுவிதச்சவன் திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார்.மேலும் தென்னிந்திய மற்றும் மலையாள திரையுலகின் பல முன்னணி பழம்பெரும் இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை பூவாசல் காதர் இயற்றியுள்ளார்.

தமிழ் திரையுலகில் பழம்பெரும் இசையமைப்பாளரான கே.வி.மகாதேவன் அவர்கள், இசைஞானி இளையராஜா அவர்கள், இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் & கங்கை அமரன் உள்ளிட்ட பல இசை அமைப்பாளர்களின் பாடல்களுக்கு பூவாசல் காதர் வரிகளை கொடுத்துள்ளார். மேலும் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம், எஸ்.ஜானகி, கே.எஸ்.சித்ரா, பி.சுசீலா. பி.மாதுரி, உண்ணிமேனன் உள்ளிட்ட பல பிரபல பாடகர்கள் அனைவரும் பூவாசல் காதர் வரிகளில் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்த பூவாசல் காதர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மறைந்த பூவாசல் காதருக்கு வயது 72. பிரபல பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் மறைந்த கவிஞர் பாடலாசிரியர் பூவாசல் காதர் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில்,"மலையாளத் திரையுலகில் அழகான பாடல்களை அர்ப்பணித்த பூவாசல் காதர் இன்று மறைந்தார். இந்த கோவிட் காலத்தில் எத்தனை விலைமதிப்பற்ற உயிர்களை நாம் இழந்துள்ளோம். எனது முதல் பாடலான “செல்லம் செல்லம்” என்ற மாநில விருது பெற்ற பாடல் மற்றும் "பூமநேம்" என்ற சூப்பர்ஹிட் பாடல் உள்பட பல பாடல்களை எழுதியுள்ளார். மிகவும் மென்மையான மரியாதைக்குரிய நபராக இருந்த பூவாசம் காதர் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய விரும்புகிறேன் அவர்களது குடும்பத்தினரின் பெரும் துயரத்தில் பங்கு கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.பாடலாசிரியர் பூவாசல் காதர் அவர்களின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.


A post shared by K S Chithra (@kschithra)