முதல்முறையாக தெலுங்கு சினிமாவில் களமிறங்கி இருக்கும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் திரைப்படம் கஸ்டடி. தொடர்ந்து பக்கா எனடர்டெய்னிங் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் இயக்குனர் வெங்கட் பிரபு தனது திரைப்படங்களிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு முழுக்க முழுக்க அழுத்தமான கதை களத்தில் வித்தியாசமான போலீஸ் திரைப்படமாக கஸ்டடி திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற கஸ்டடி திரைப்படத்தின் விழா ஒன்றில் பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு கஸ்டடி திரைப்படத்தை தான் எழுதுவதற்கும் உருவாக்குவதற்கும் இன்ஸ்பிரேஷனாக இருந்தது மலையாளத்தில் வெளிவந்த நாயட்டு திரைப்படம் என தெரிவித்திருந்தார்.
மலையாளத்தில் வெளிவந்த நாயட்டு திரைப்படம் போன்ற ஒரு திரைப்படத்தை எடுக்க வேண்டும் என நினைத்து தான் கஸ்டடி திரைப்படத்தை உருவாக்கியதாக தெரிவித்திருந்த வெங்கட் பிரபு நாயட்டு திரைப்படத்தை போல அப்படியே எடுக்க முடியாது, அதில் நிறைய ரியாலிட்டி இருக்கும் என யோசித்து தெலுங்கு & தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் நிறைய விஷயங்களை சேர்த்து மாஸான என்டர்டெய்னிங் திரைப்படமாக கஸ்டடி படத்தை உருவாக்கியதாக தெரிவித்திருந்தார். ஆனால் சமூக வலைதளங்களில் கஸ்டடி திரைப்படம் நாயட்டு திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டது என்றும் ரீமேக் என்றும் பலவிதமான செய்திகள் பரவி வந்தன.
இந்நிலையில் இந்த வதந்திகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில், “இது உண்மை இல்லை... எல்லோரும் நாளை தெரிந்து கொள்வார்கள் நான் என்ன சொன்னேன் என்பதை தவறாக புரிந்து கொண்டீர்கள் தயவு செய்து செய்து படத்தைப் பார்த்த பின் என்னிடம் சொல்லுங்கள்” என குறிப்பிட்டு வெங்கட் பிரபு பதிவிட்டுள்ளார். கஸ்டடி திரைப்படத்தின் ட்ரெய்லர் வைத்து பார்த்தால் வித்தியாசமான ஒரு போலீஸ் திரைப்படத்தை உருவாக்குவதற்கு இன்ஸ்பிரேஷனாக நாயட்டு படம் இருந்திருக்குமே தவிர அந்த திரைப்படத்தின் சாயலோ தழுவலோ அல்லது ரீமேக் என சொல்லும் அளவிற்கோ கஸ்டடி திரைப்படம் நிச்சயம் இருக்காது என்பதும் பலரின் கருத்தாக இருக்கிறது.
ஏற்கனவே கஸ்டடி திரைப்படத்தின் கதை என்ன என்பது குறித்து வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார். அதுவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தற்போது நாயட்டு படத்தை குறிப்பிட்டு பரவும் இந்த வதந்திகளும் கஸ்டடி படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். தெலுங்கு நடிகர் நாகச் சைதன்யா முதல் முறை தமிழில் ஹீரோவாக களமிறங்கும் கஸ்டடி திரைப்படத்தில் அரவிந்த்சாமி, சரத்குமார், பிரியாமணி, க்ரீத்தி ஷெட்டி உட்பட பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீனிவாசா சித்தூரி அவர்களின் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள கஸ்டடி திரைப்படத்திற்கு, SR.கதிர் ஒளிப்பதிவில், வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார்.இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து கஸ்டடி படத்திற்கு இசையமைத்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாளை மே 12ஆம் தேதி கஸ்டடி திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.