வேலூரில் தாலி கட்டும் நேரத்தில் திருமணம் நின்ற நிலையில், மாப்பிள்ளைக்குப் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் வருகின்றன.
வேலூர் அணைக்கட்டு தாலுகா திப்பசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ரவிக்கும், அப்பகுதியில் உள்ள பலவன்சாத்து குப்பம் பகுதியைச் சேர்ந்த ரோஜா பிரியாவுக்கும் திருமணம் பேசி முடிவானது.
அதன்படி, திருமண பத்திரிகை அச்சடித்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுக்கப்பட்ட நிலையில், வேலூர் சேண்பாக்கத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் மணமக்கள் இருவரும் திருமணக் கோலத்தில் இருந்தனர். அப்போது, தாலி காட்டும் நேரத்தில், மணமகனின் பெற்றோரும், உறவினர்கள் சிலரும் தங்களுக்குப் பெண் பிடிக்கவில்லை என்றும், மணமகளுக்கு மனநலம் சரியில்லை என்றும், திக்குவாய் என்றும் கூறி.. அதனால் தாலி கட்டக்கூடாது என்றும் மணமகன் ரவியிடம் வற்புறுத்தி உள்ளனர். மணமகனோ, தனக்குப் பெண் பிடித்திருப்பதாகக் கூறியுள்ளார்.
இந்த தகவல் பெண் வீட்டாருக்கும் தெரிய வரவே, இரு தரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அதிருப்தி அடைந்த மணமகன் ரவி அங்கிருந்து வெளியே சென்றுவிட்டார். மணமகன் மாயமானதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கிருந்து வேலூர் வடக்கு காவல் நிலையத்துக்குச் சென்ற மணமகன் ரவி, தனக்கு நடக்க இருந்த திருமணத்தைத் தடுத்து விட்டதாகவும், ஆனால், அந்த பெண்ணையே தான் திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து இருவரின் பெற்றோரையும் போலீசார் காவல்நிலையத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதற்கு, மணமகனின் பெற்றோர் ஒற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அந்த பெண்ணையே திருமணம் செய்யப்போவதாகவும், தன்னால் அந்த பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்றும் , மணமகன் உறுதிப்படக் கூறியுள்ளார்.
இதனால், திருமணத்திற்கு இடையூறு செய்யக்கூடாது என்று மணமகனின் பெற்றோரை எச்சரித்துவிட்டு, பதிவு திருமணம் செய்து கொள்ளுமாறு மணமகனிடம் போலீசார் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, மணமகள் ரோஜா பிரியாவையே தாம் திருமணம் செய்துகொள்வதாகக் காவல் நிலையத்தில் எழுதிக்கொடுத்துவிட்டு, தன் பெற்றோருடனே மணமகன் ரவி சென்றுவிட்டார்.
இதனிடையே, திருமணம் நிச்சயமான பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்று மணமகனின் நல் மனசுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.