தமிழ் சினிமாவில் மாபெரும் தமிழ் மேதையாக பல தசாபதங்களாக பயணித்து வருபவர் பாடலாசிரியரும் எழுத்தாளருமான வைரமுத்து. 1980 ல் இயக்குனர் வைரமுத்து இயக்கத்தில் வெளியான நிழல்கள் படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்ற பொன்மாலை பொழுது என்ற பாடல் மூலம் தமிழ் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. பின் தொடர்ந்து எம் எஸ் விஸ்வநாதன், ஏ ஆர் ரஹ்மான், சந்திர போஸ், தேவா, யுவன் ஷங்கர் ராஜா, வித்யாசாகர், டி இமான், ஜிவி பிரகாஷ் என்று பல தலைமுறை இசையமைப்பாளருடன் பணியாற்றி தமிழ் சினிமாவின் தமிழ் ஆளுமையாக வளர்ந்து நின்றார். திரையுலகில் மட்டுமல்லாமல் இலக்கிய வட்டாரத்திலும் வைரமுத்து அவர்கள் தனித்து உயர்ந்து நின்றார் இதுவரை 35 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். பெரும்பாலான புத்தகங்கள் தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் மொழி பெயர்கபட்டு வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக தேசிய விருதுகள் வென்றுள்ளார் மேலும் 10 பிலிம் பேர் விருதுகள், 6 மாநில விருதுகள் என்று விருதுகளை குவித்தவர் வைரமுத்து அவர்கள்.
இந்நிலையில் தமிழ் திரையுலகின் சிறந்த திரைக்கதை ஆசிரியரும் வசனகர்த்தாவும் அரசியல் வரலாற்றின் ஆளுமையுமான மறைந்த முன்னாள் தமிழ் நாடு முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் 100வது பிறந்தநாள் விழா இந்த ஜூன் மாதம் முழுவதும் ரசிகர்களாலும் தொண்டர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக பாடலாசிரியர் வைரமுத்து அவர்கள் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்காக பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறார். தமிழ் நாட்டரசின் தயாரிப்பில் வைரமுத்து எழுதும் இப்பாடலுக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை உருவாக்கி வருவதாகவும் விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் வைரமுத்து அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் பாடல் பதிவின் போது எடுக்கபட்ட வீடியோவினை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.