இயக்குனர் மாரி செல்வராஜின் மாமன்னன் திரைப்படம் இன்று ஜூன் 29ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸானது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசையில், வைகைப்புயல் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் ஃபாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த மாமன்னன் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவர தயாராகி வரும் படம் வாழை. பெரிய நட்சத்திரங்கள் யாருமில்லாமல் நான்கு சிறுவர்களை மட்டும் வைத்து எதார்த்தமான படைப்பாக வாழைப் படத்தை மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கியிருக்கிறார். இப்படம் குறித்த அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற மாரி செல்வராஜ் ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் மாரி செல்வராஜ் நம்மோடு பல முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதன் ஒரு பகுதியாக இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக பிரிந்திருக்கும் அவர்களுடன் பிறந்த அண்ணன் திரு.சிவனனைந்த பெருமாள் அவர்களின் பெயரை வாழை திரைப்படத்தில் ஹீரோவின் பெயராக வைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். அது குறித்து பேசியபோது,
“நான் இப்போது ஒரு சுதந்திரமான வழியில் நடந்து கொண்டிருக்கிறேன் அல்லவா? நான் வேறு ஒரு நிலையில் இருக்கிறேன். நான் வேறு ஒன்று செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய வீடு, குடும்பம், சொந்தம் இவை எல்லாம் தாண்டி என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாத ஒரு இடத்திற்கு நான் சென்று கொண்டிருக்கிறேன். அப்படி இருக்கையில் இவரை பார்த்தால் மட்டும் எனக்கு மிகவும் பயம். இந்த உலகத்திலேயே என்னை ஒருவர் கட்டுப்படுத்த முடியும் என்றால் அது அவர் அண்ணன் (திரு.சிவனனைந்த பெருமாள்)மட்டும் தான். ஒருவேளை அது கூட நாங்கள் இருவரும் இப்படி இருப்பதற்கு காரணமாக அமைந்திருக்கலாம். கட்டுப்படுத்த முடியும் என்பது... நான் என்ன ஆகி இருப்பேன் என்று தெரியாது ஒரு கட்டத்தில், நம்மை அவ்வளவு பார்த்துக்கொண்டார். நம்மை வடிவமைப்பதற்காக மிகவும் கஷ்டப்பட்டார் என்று நமக்கு தோன்றுகிறது. இதை அப்போது நான் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றால் நான் ஊரில் ஒரு சாதாரண பையனாக இருந்து காணாமல் போய் இருப்பேன். எங்கேயாவது ஒரு பெரிய தப்பில் மாட்டி ஒரு குற்றவாளியாகவோ அல்லது திருடனாகவோ ஆகியிருப்பேன். அந்த தண்டனைகளும் அந்த அடிகளும் இந்த பயங்கரமான அக்கறையும் அன்பும் தான் என்னை ஒழுங்கு படுத்தியது. அவரது குரலையே ரொம்ப நாள் கழித்து கேட்கிறேன்." என சொன்ன இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களிடம், “கடைசியாக அவரோடு எப்போது போனில் பேசினீர்கள்?” என கேட்டபோது, “என்னுடைய கல்யாணத்திற்கு அழைத்தேன் வந்திருந்தார்.” என பதில் அளித்தார். தொடர்ந்து அவரிடம், “அண்ணனுடைய பெயர் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?” என கேட்டபோது, “அவருடைய பெயர் சிவனனைந்த பெருமாள். பரியேறும் பெருமாள் இருக்கிறது அல்லவா அது மாதிரி அவருடைய பெயர் சிவனனைந்த பெருமாள். என்னுடைய “வாழை” படத்தில் கதாநாயகனின் பெயராக அந்த பெயரை தான் வைத்திருக்கிறேன்.” என தெரிவித்திருக்கிறார். இயக்குனர் மாரி செல்வராஜின் அந்த முழு பேட்டி இதோ...